Abstract:
உலகிலுள்ள மிகப்பழமையான சமயங்களில் இந்து சமயம் முதன்மையாது. கடவுளர், வழிபாடு, நம்பிக்கைகள், பண்பாடு, கலை தத்துவ சிந்தனைகளால் உலக சமயங்களில் முன்னிலை வகிக்கின்றன. பண்டைக்காலம் முதலாகவே இந்தியாவுக்கும் தென்னாசிய, தென்கிழக்காசிய, ஐரோப்பிய, ஆபிரிக்க நாடுகளுக்குமிடையிலான உறவுகள் காரணமாக இந்துப் பண்பாடும் அதனோடு இணைந்த கூறுகளும் கொண்டும் கொடுத்தும் வளர்ந்து வருவதாயிற்று. குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பூர்வீகமனவை எனினும் சோழர் காலத்திலேயே அவ்வுறவுகள் எழுச்சியடைகின்றன. இந்தோனேசியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றாக விளங்கும் பாலித்தீவில் இந்து சமயமும், அதன் பண்பாட்டுக் கூறுகளும் பெற்ற வளர்ச்சியினை இனங்காண்பதே இந்த ஆய்வின பிரதான நோக்கமாகும். இந்த ஆய்விற்கான முதன்மை மூலங்களாக தென்கிழக்காசிய இந்துப் பண்பாடு தொடர்பாக வெளிவந்த நூல்களும் துணை மூலங்களாக தென்கிழக்காசிய இந்துப்பண்பாடுகள் தொடர்புடைய இணையத்தளங்கள், கட்டுரைகளட என்பனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் வரலாற்றியல் ஆய்வு, விபரண ஆய்வு, பகுப்பாய்வு முதலான ஆய்வு முறையியல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலித்தீவில் இந்துசமயத்தின் தோற்றம், வளர்ச்சி, இந்து அரசியல் முறைமை என்பவற்றை விளக்குவதற்கு வரலாற்றியல் ஆய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலித்தீவில் இந்து சமயத்தின் செல்வாக்கு எத்தகையது என்பதை விபரிப்பதற்கு விபரண ஆய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாலத்தீவில் இந்துசமயத்தின் வளர்ச்சிப் போக்குகளை சமய நம்பிக்கைகள் கலைகள், வழிபாடுகள், இதிகாசச் செல்வாக்கு எனப் பிரித்து நோக்குவதற்கு பகுப்பாய்வு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் பாலித்தீவில் இன்றளவும் 98% இந்துக்கள் வாழ்ந்து வருவதோடு அவர்கள் இந்துசமயம்சார் பண்பாட்டு மரபுகள், கலைகள், வழிபாடுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் எனபவற்றைப் பின்பற்றி வருகின்றனர். ஆரம்பகாலம் தொட்டுத் தற்காலம் வரையிலான பாலித்தீவின் பண்பாட்டு வளர்ச்சியில் இந்துசமயம் மிகுந்த செல்வாக்கினைச் செலுத்தியுள்ளமையினை அறியமுடிகின்றது.