Abstract:
மனித இனம் பயணம் செய்வது தொல்வழக்கமாகும். உலா, பயணம் முதலிய சுற்றுலா (tour) பொருண்மையிலான சொற்களாகும். Tour என்னும் சொல் TORNUS என்னும் இலத்தீன் மொழியின் அடிப்படையில் தோன்றியது. சுற்றுலா செல்லுதல் மனிதனின் உலகியல் அறிவு. பல்லினச் சூழல், மானுடப் பண்புகளை அறிவதற்கு உதவுகிறது. சுற்றுலாவின் வகைகளுள் ஒன்றான ஆன்மிகச் சுற்றுலா வாழ்வில் இன்றியமையாதது. அவ்வகையில் மதுரை நோக்கிய ஆன்மிகச் சுற்றுலா பற்றிய பொருண்மையில் இக்கட்டுரை அமைகிறது. உலகின் மூத்த இனமான தமிழினம் தோன்றி வளர்ந்த குமரிக்கண்டத்தின் எச்சங்களைத் தாண்டியதாய் மதுரை நகர் விளங்குகின்றது. முதல், இடைஈ கடைச் சங்கங்கள் போற்றிய நகரம் மதுரை நகரமாகும். மதுரை நகரின் சிறப்பினைக் காலந்தோறும் இலக்கியங்கள் பதிவு செய்து வருகின்றன. இலக்கியத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாற்றையும் உடைய மதுரை மாநகர் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு, கலைகள் மிக்க வாழ்வியல் முறைகளை அறிய உதவுகிறது. தமிழர் போற்றிய காதலும் வீரமும், தமிழர் வணங்கிய கடவுளுக்கான கோயில்களும், தமிழர் அடையாளம் தாங்கிய பல்வேறு தொல்லியல் நினைவுச் சின்னங்களைப் பெற்றுள்ள நகரமாகவும் மதுரை மாநகர் விளங்குகின்றது. அத்தகைய மதுரை நோக்கிய கலாசாரப் பயணத்தில் அந்நகர்சூழ அமைந்துள்ள ஆறுகளையும் முருகனின் படைவீடுகளையும் விளக்குவது இந்த ஆய்வின் முக்கிய நோக்கங்களாகும். வைகை நதியின் நாகரிகத்தையும் தற்காலத்தில் வைகையின் இயல்பினையும் காட்சிப்படுத்துவதுடன் சிலம்பாறு (நூபுரகங்கை) குறித்த இலக்கிய பதிவுகளும் தற்காலத்தில் நூபுரகங்கையின் இயல்பையும் விளக்குவதாக இந்த ஆய்வு அமைகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் முதலாவது படைவீடான திருப்பரங்குன்றம், ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை குறித்த கள ஆய்வில் படை வீடுகளின் தனித்தன்மை, கடவுள்களின் சிறப்பு, தல வரலாறு, கதைகள், வழிபாட்டு முறைகள், நுண்கலைகள் முதலியன குறித்துரைக்கும் நோக்கில் இவ்வாய்வு பயணிக்கிறது.