dc.description.abstract |
சைவசித்தாந்தச் செல்நெறியின் முக்கிய விடயமாக அமைவது அளவைப் பிரமாணங்கள் பற்றிய கருத்தியலம்சம் ஆகும். இந்திய மெய்யியற்புலத்தில் பத்திற்கும் மேற்பட்ட பிரமாணங்கள் இடம்பெறுகின்ற போதும் சைவசித்தாந்தம் காட்சி, அனுமானம், ஆப்தம் ஆகிய மூன்றையும் பிரமாணங்களாக எடுத்தாள்கின்றது. இம்மூன்றும் ஆன்ம சிற்சக்திக்கு உதவுவனவாக உள்ளன. இந்நிலையில் ஆன்ம சிற்சத்திப் பிரமாணம் என்பது ஏகப்பிரமாணமாக குட்டப்படுகின்றமை நோக்கத்தக்கது. சைவசித்தாந்தம் சுட்டும் மூன்று பிரமாணங்களும் பொருள்களை ஆன்மாவுக்கு விளக்கி நிற்கும். அவ்வாறு பொருள்களை ஆன்மா விளங்கிக் கொண்ட பின்னர் உய்த்து அறிந்து கொள்வதே ஆன்ம சிற்சக்தி ஆகிறது. சிற்சக்தி என்பது “தன்னை நோக்கி நிற்கும் ஆற்றல்” எனப் பொருள் கொள்ளப்படும் நிலையில், சிவஞானசித்தியாரில் “உயிரோடு உணர்வு“ என்ற சொல்லாட்சி மூலம் உயிரினின்றும் பொருட்களை அறியும் பொருட்டுச் செல்கின்ற பிரமாணம் எதுவோ அதுவே ஆன்ம சிற்சக்தி எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வானது விபரன ஆய்வு முறையியலுக்கமைய மேற்கொள்ளப்படுவதுடன் தர்க்க ரீதியான பகுப்பாய்வு, தொகுத்தாய்வு முறைகளுக்கமைய முடிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சைவசித்தாந்த அறிவாராய்ச்சியியற் கோட்பாட்டின் படி ஆன்ம சிற்சக்தி என்பது சுயமாக இயங்க வல்லது. இதனால் அறிவு சுயம்பிரகாசமானது எனக் கூறப்படுகிறது. இந்த வகையில் ஆன்மா அறிவைப் பெறுவதற்கு உதவியாக இருப்பது ஆன்ம சிற்சக்தி பிரமாணம் என்பதே இந்த ஆய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது. |
en_US |