Abstract:
இராமநாதபுரத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் சேதுபதிகளாவார். இவர்கள் அரச சமயமாக இந்துசமயத்தைக் கொண்டிருந்தாலும் சமயப்பொறையுடையவர்களாக ஆட்சி செய்ததுமன்றித் தானங்களையும் வழங்கி வந்துள்ளனர். இத்தானங்கள் பற்றிய செய்திகளைக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் பல்வேறுபட்ட ஆவணங்களும் அறியத் தருகின்றன. சேதுபதிகளால் பொறிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட செப்பேடுகளில் தானங்கள் பற்றிய செய்திகள் கிடைக்கப்பெறுகின்றன. மன்னர்கள் மட்டுமன்றி அவர்களுடைய அரசிகளான நாச்சியார்களும் பல தானங்களை வழங்கியமையைச் செப்பேடுகள், கல்வெட்டுக்கள் போன்ற சான்றுகள் வெளிப்படுத்துகின்றன. காதலி நாச்சியார், மங்களேஸ்வரி நாச்சியார் போன்ற இராணிகளின் கொடைகள் பற்றி மேலசீத்தைச் செப்பேடு, களத்தூர்ச் செப்பேடு, நெடிய மாணிக்கம் செப்பேடு ஆகிய மூன்று செப்பேடுகள் அறியத் தருகின்றன. இச் செப்பேடுகளை அடிப்படையாகக் கொண்டு நாச்சியார்களின் சமய ஈடுபாடு, தானத்தின் தன்மைகள் மற்றும் இந்து சமயம் போன்ற விடயங்களை மையப்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவர்களால் வெளியிடப்பட்ட செப்பேடுகளினூடாக இந்துப் பண்பாட்டு வளர்ச்சியில் பெண்களின் வகிபங்கை அறிதல், இந்துப் பண்பாட்டின் பிரதான அம்சங்களை இனங்காணுதல் போன்றன இந்த ஆய்வின் நோக்கங்களாக அமைகின்றன. மேற்படிச் செப்பேடுகளைப் பிரதான மூலங்களாக்க் கொண்டு வரலாற்று ஆய்வு முறையியலின் பின்னணியில் பகுப்பாய்வு செய்வதாக இந்த ஆய்வு அமைகிறது. சேதுபதி நாச்சியார்களின் இச்செப்பேட்டுத் தானங்கள் சமயப் பணிகளில் அரச பெண்களுக்கு வழங்கப்பட்ட சுகந்திரத்தைப் புலப்படுத்துவதாக அமைவதோடு, இந்து சமயத்தின் பிரதான விடயங்களான கோயில், பிராமணர், மற்றும் சமய நம்பிக்கைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களைத் தெரியப்படுத்துகின்றன என்பது இவ்வாய்வின் முடிவாக அமைகின்றது. மேலும் தமிழகத்தில் ஆட்சி செய்த பல்வேறுபட்ட வம்சங்களைச் சேர்ந்த அரச பெண்களின் சமயப் பணிகளின் தொடர்ச்சியையும் கண்டு கொள்ள முடிகின்றது.