dc.description.abstract |
பண்டைய இந்துக்களின் பண்பாட்டு மரபில் நிலவியிருந்த பல்வேறு சடங்கு முறைகளுள் மிகவும் ஆக்ரோஷமானதாகவும், உயிர்த்துடிப்பு மிக்கதாகவும் காணப்பட்ட அம்சம் பலியிடல் ஆகும். மக்கள் தமது வேண்டுதல்களை இறைவனிடத்தில் முன்வைக்கவும், அவை தீர்ந்தவுடன் அதற்கான நன்றியை இறைவனுக்குச் செலுத்தவும் விலங்குகளையோ அல்லது தம் உயிரையோ பலியிட்டுக் கொண்டனர். பலி என்பதற்கு ”கொடுத்தல்” என சமஸ்கிருதத்தில் பொருள் கொள்வர். அவ்வாறு இறைவனுக்க பலி செலுத்தப்படுவது போலவே, போரிலே மன்னர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தமது இலட்சியங்களில் வெற்றி பெறுவதற்காகவும் கூட பலி கொடுக்கப்பட்டன. வீரம் நிறைந்த மானிடர்கள் தமது உயர் இலட்சியங்களுக்காக யுத்த களங்களிலே விலங்குகளைப் பலி கொடாமல் தங்களது சிரசினை தாங்களே தங்கள் கைவாளினால் அறுத்துக் களப்பலி கொடுத்தனர். அதுவே தலைப் பலி ஆகும். பெரும்பாலும் களப்பலியானது போர்த்தெய்வமாக விளங்கிய கொற்றவைக்கே கொடுக்கப்பட்டது. அவளுக்கு தங்கள் இரத்தத்தினால் அபிஷேகம் செய்து தமது சரீரத்தைப் படையலாக்க் கொடுத்து திருப்திப் படுத்தி மன்னருக்கு வெற்றியைத் தருமாறு வேண்டினர். ஆண்கள் மாத்திரமின்றி பெண்களும் தலைப்பலி கொடுத்ததுண்டு. இவ்வாறு கொடுக்கும் தலைப்பலியானது அரிகண்டம், நவகண்டம் எனப் பிரதானமாக இருவகையாக அமைகிறது. இந்த ஆய்வானது பண்டைய இந்துக்களிடம் குறிப்பாகத் தமிழகத்தில் காணப்பட்டிருந்த உயிர்த்துடிப்புமிக்க அம்சமான தலைப்பலியிடல் மரபானது தொன்றுதொட்டு நிலவி வந்திருந்தமை பற்றித் தெளிவாக அறிதலை நோக்கமாகக் கொண்டு வரலாற்று முறைமையிலும், இலக்கிய விபரண முறைமையிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்வழி பின்வரும் செய்திகளைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதிகாசக் கதைகள், பழந்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், மன்னர் செப்பேடுகள் மற்றும் திருமுறைப் பாடல்களிலும் கூட இத்தலைப் பலி பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழ் நாட்டின் கிராமப்புறங்களிலே இவை பற்றிய சிற்பங்கள் காணப்படுகின்றன. தமிழகக் கோயில்களிலும் இவ்வகைச் சிற்பங்களைக் காணமுடிகின்றது. இவ்வாறு தலைப் பலி கொடுத்த வீரரின் சிற்பத்தை நடுகல்லாக்கி அவனைத் தெய்வமாக வழிபடும் மரபு பண்டைத் தமிழர் பண்பாட்டில் காணப்பட்டது. இவ்வாறு பண்டைய இந்துக்களிடம் குறிப்பாகத் தலைப்பலியிடல் மரபானது தொன்றுதொட்டு நிலவி வந்திருந்தமை பற்றித் தெளிவாக அறிய முடிவதோடு போரியல் மரபு சார்ந்த நம்பிக்கை மற்றும் விசுவாசம் என்பவற்றை வெளிப்படுத்தும் அம்சமாகவும் அது விளங்கியது என்பதை அறிந்து கொள்ள இந்த ஆய்வு துணைபுரிகிறது. |
en_US |