dc.description.abstract |
இறப்பு என்பது தவிர்க்கமுடியாத நியதியாகும். ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரிற்கும் அவரின் அன்பிற்குரியவர்களுக்கும் இடையில் உடல், உள ரீதியான தொடர்புகள் காணப்படும். ஆனால் அவர் இறந்தவுடன் இவ்வகை பரஸ்பர உறவு அறுந்துவிடுகிறது. இதனை இறந்தவர்களின் அன்பிற்குரியவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது உளப்பாதிப்புக்குள்ளாகும் போது இறப்பச் சடங்குகள் சிறந்த உள ஆற்றுப்படுத்தலாக அமைகிறது. அதாவது இறப்பு என்ற நிலையினை உளப்பாதிப்பின்றி ஏற்றுக்கொள்வதற்கும் இறப்பு நிலையினால் ஏற்படும் குற்ற உணர்வுகளினைக் கையாளவும் உளரீதியிலான ஆதரவினைத் தேடுவதற்கும் இச் சடங்குகள் உதவிபுரிகின்றன. உண்மையில் இறப்புநிலைச் சடங்குகளினை மேற்கொள்ளல் என்பது ஓர் விஞ்ஞான அடிப்படையிலான செயற்பாடுகளாக கொள்ளப்படுகின்றது. எனவேதான் இவ்வாய்வானது இறப்புத் துயரை கையாள்வதில் இந்து சமய இறப்புச் சடங்குகளின் தொடர்பை இனங்காண்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பிரதேசமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு இந்து சமயத்தைப் பின்பற்றுகின்ற 1414 பேரில் ஆய்வு மாதிரியாக 141 மாதிரி தெரிவு செய்யப்பட்டனர். இவ் ஆய்வானது கலப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தரவு சேகரிப்புக் கருவிகளாக வினாக்கொத்து, Adult Attitude to Grief Scale, நேர்காணல் முறை பயன்படுத்தப்பட்டது. இறப்புத்துயரால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட தரவுகள் விபரன பகுப்பாய்வின் மூலமும், இறப்பு துயருக்கும் இந்து சமய இறப்புச் சடங்குகளிற்கும் இடையிலான தொடர்புகள் SPSS (verson 20) ல் இணைவுக் குணகம் மூலமும் நேர்காணலில் பெறப்பட்ட கூற்றுக்கள் உள்ளடக்கப் பகுப்பாய்வின் மூலமும் தரவுகள் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டது. புள்ளிவிபர ரீதியாகப் பெறப்பட்ட முடிவுகள் நிரூபிக்கக் கூடிய வகையில் பண்புசார் தரவுகள் அமைந்திருந்தன. ஆய்வின் முடிவுகளாக இறப்புத்துயரில் அபரக்கிரியைகள் (R - 0.531) தொடர்பட்டிருப்பதுடன் அந்தியேட்டிக் கிரியைகள் (R - 0.385) மற்றும் தகனக் கிரியைகள் (R - 0.056) இறப்புத் துயரினைக் குறைப்பதில் தொடர்புபட்டுள்ளன. இந்த ஆய்வின் பரிந்துரைகளாக இந்து சமய இறப்புச் சடங்குகள் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும். இறந்தவரின் உடல் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் நினைவுப் பொருளை வைத்து சடங்குகள் நடாத்தப்படுதல் வேண்டும். இறந்தவரின் புகைப்படத்திற்கு சடங்குகள் செய்வதன் மூலம் இறப்புத் துயரினைக் கையாள முடியும் என ஆய்வின் பரிந்துரைகளை முன்வைக்கலாம். ஆகவே மனிதர்களிடத்தில் இறப்புச் சடங்கானது முக்கியமானதாகும். |
en_US |