Abstract:
இந்துசமயம் சார் தொன்மையான வரலாறுகள், நிகழ்வுகள் என்பவற்றை அறிவதற்கு நாயன்மார் பாடல்களும், ஆழ்வார் பாசுரங்களும் துணைபுரிகின்றன. தொன்மம் என்பது கடவுளையும், தேவரையும் பற்றிய கருத்தியல்கள் மட்டுமன்றி, பௌதிகம், பௌதிக அதீத சிந்தனைகள் மற்றும் சமய உண்மைகளை ஆழம் காண உதவுவது எனலாம். தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் பக்தி இயக்கத்தை முன்னெடுத்த நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் அதிகளவான தொன்மங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. சைவ சமயத்தை மீட்டெடுத்தல், இறையிருப்பைத் தெளிவுபடுத்தி விளக்குதல், சமயத்தின்பால் மக்களுக்கான ஈடுபாட்டினை அதிகரித்தல், பழமை பேணுதல், பழைa வரலாறுகளைக் கூறுவதனூடாக சமுகத்தை வளம்படுத்தல் – ஆற்றுப்படுத்தல் மற்றும் சமயப் பெரியவர்களின் வரலாறுகளை எடுத்துரைத்தல் முதலான காரணங்கள் பக்தியியக்கச் செயற்பாட்டாளர்களால் பல தொன்மக் கருத்துக்களை எடுத்துரைப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது எனலாம். நம்மாழ்வார் அருளிச் செய்த நூல்கள் நான்காகும். இவற்றுள், திருவாய்மொழியே மிகச் சிறப்புடையதாகும். இந்நூலின் மூலம் நம்மாழ்வார் பல தொன்மம் சார் கருத்துக்களை எடுத்துரைக்க முனைந்துள்ளார். இந்த ஆய்வானது விளக்க முறை ஆய்வு மற்றும் வரலாற்றியல் ஆய்வு ஆகிய ஆய்வு முறையியலின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஆய்வின் மூலம் புராண இதிகாச கதைகள் மூலம் வெளிப்படத்தப்படும் தொன்மம் சார் கருத்துக்களும், அத்துடன் திருமால் பரத்துவத்துடன் தொடர்புடைய தொன்மவியல் கருத்துக்கள் ன்பனவும் ஆராயப்பட்டுள்ளன. இத்தகையதோர் பின்னணியில் நம்மாழ்வார் பாசுரங்களில் ஒன்றான திருவாய்மொழியில் இழையோடியுள்ள தொன்மம் சார் எண்ணக்கருக்களைப் பொருத்தமான சான்றாதாரங்களுடன் எடுத்துரைப்பதும், விளக்க முயல்வதுமே இவ் ஆய்வுக் கட்டுரையின் பிரயத்தனமாகும்.