Abstract:
இந்து சமய மரபுகளை எடுத்துக் கூறும் கருவூலங்களாகத் திகழ்கின்ற புராணங்களுக்கு இந்துமதத்தில் சிறப்பானதோர் இடமுண்டு. இத்தகைய சிறப்பினால் தான் இந்து இலக்கியங்கள் யாவற்றிலும் புராணச் செய்திகள் ஏதோவொரு வகையில் பதிவாகியுள்ளன. இந்து இலக்கியங்கள் எனும் போது, பல இலக்கியங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அவற்றுள் மாணிக்கவாசகருடைய திருக்கோவையாரில் சித்தரிக்கப்படும் புராணச் செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இறைவனுடைய அருள் பெற்ற அருளாளர்களால் இயற்றப்பட்ட தெய்வப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் அறிவாற் சிவனென ஆன்றோர்களால் பாராட்டப்பெறும் திருவாதவூரடிகள் எனும் மாணிக்கவாசகப் பெருமானால் இயற்றப் பெற்ற திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாவது திருமுறையாக அமைந்து விளங்குகின்றன. திருச்சிற்றம்பலக்கோவையார் என்று வழங்கப்படும் திருக்கோவையாரை மனிவாசக அடிகளார் திருவாய் மலர திருச்சிற்றம்பலம் உடையானே தம் கைப்பட எழுதியமைக்கப் பெற்ற ஏற்றமுடையது. கோவைகடகெல்லாம் மிகத் தொன்மையும் தலைமையும் வய்ந்த்துமான இக்கோவை சிற்றின்ப பொருளைத் தந்து நிற்பது போன்று காணப்பெற்றாலும் உண்மையில் இதன் உள்ளுறைப் பொருள் திருவாசகத்திற்கு ஒப்ப பேரின்பக் கருத்து மிக்கது. இப்பனுவலிலே அடிகளார் சிவனோடு தொடர்புடைய புராணச் செய்திகள் பலவற்றைப் பதிவிட்டுச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவைகையில் ஆய்வின் நோக்கத்தினை அடையும் பொருட்டு விபரண ஆய்வு முறை, பகுப்பாய்வு முறை போன்றனவும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் பகுப்பறிவாய்வு முறை, தொகுத்தறிவாய்வு முறை போன்றனவும் பயன்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. புராணங்களில் கூறப்பட்டுள்ள இறைவனின் தோற்றப்பொலிவு, அவரின் அட்டவீரச்செயல்கள், பல்வேறு மூர்த்தங்கள் என்பவற்றை அடிப்படையாக்கட கொண்ட பல்வேறு சிந்தனைகளை மாணிக்கவாசகர், திருக்கோவையாரிலும் பதிவிட்டுச் சென்றுள்ளமையினை இந்த ஆய்வு வெளிப்படுத்தி நிற்கிறது.