Abstract:
ஈழத்து வெண்கலச் சிற்பக்கலை வரலாற்றிற்கு பிராந்திய ரீதியான மக்களது பங்களிப்பு இன்றியமையாதவையாய் இருந்திருக்கவேண்டும் அண்மைக்காலத்து என்பதனை தொல்லியல் அகழ்வாய்வு, மேலாய்வுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. இலங்கைத்தீவில் பண்பாட்டுப் பிராந்தியங்களாகக் காணப்பட்டிருக்கக்கூடியது ரோகணப்பரப்பு (கதிர்காமம் மகாகமை உள்ளிட்ட பரப்பு), திகவாவிப்பிரதேசம் (கிழக்கிலங்கை). கல்யாணிப்பிரதேச் (களனி கங்கையின் முகத்துவாரப் பரப்பு), மன்னார் பிரதேசம் (பூநகரி உள்ளிட்ட பரப்பு), இரணைமடுப் பிரதேசம் (தொன்மம் மிக்க வன்னித் தொல்லியல் பரப்பு), மற்றும் யாழ்ப்பாணக் குடாநாடு (நாகதீபம்) ஆகியன பல்வேறு வகையான பண்பாட்டு உருவாக்கத்தில் பங்களிப்பினை நல்கியுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பரப்பானது புராதன தமிழ் இலக்கியங்களிலும், பாளி-சிங்கள மொழி இலக்கியங்களிலும் நன்கு வரையறுத்து குறிப்பிடப்படுமளவிற்கு பண்பாட்டுப் பரப்பிற்கு பங்களிப்பினை நல்கியுள்ளமையைக் காண்கின்றோம்.