Abstract:
மேற்கு நாட்டவரின் வருகையைத் தொடர்ந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏற்பட்ட பாரம்பரிய சமூக அமைப்பின் சிதைவுகளினாலும் பிரித்தானிய ஆட்சியினர் அறிமுகப்படுத்திய ஆங்கிலக் கல்வியினாலும் புதிய மேலை நாட்டு இலக்கியங்களின் அறிமுகத்தினாலும் தமிழில் வந்து சேர்ந்த புதியதொரு இலக்கிய வடிமே புனைகதை ஆகும்.
ஈழத்தில் 1885இல் அசன்பேயுடைய கதையுடன் தொடங்கிய புனைகதை இலக்கியங்கள் ஆரம்பத்தில் திகைப்பூட்டும் நூதன சாகஸங்கள் நிறைந்த மர்மப் பண்புவாய்ந்த கதைகளாகவே அமைந்தன. இவை ஈழத்து மண்ணையும் மக்களையும் பொருளாகக் கொண்டனவாக அமையவில்லை. ஈழத்துத் தமிழ் மக்களது சமுதாயப் பிரச்சினைகளைப் பொருளாகக் கொண்டு புனைகதை எழுதும் பண்பு இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே ஆரம்பித்தது 1914இல் வெளிவந்த மங்கள நாயகம் - தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் என்னும் நாவலில் இப்பண்பின் தொடக்க நிலையினைக் காணலாம்.