Abstract:
கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்குக் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டு வருகின்ற பல்வேறு தடை நடவடிக்கைகளின் விளைவாக இப்பிரதேசத்தின் கடல் வளத்துறையானது. மோசமாகப் பாதிக்கப்பட்டு மிகவும் நலிவடைந்த நிலையில் காணப்படுகின்றது. குறிப்பாக, இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மீன்பிடிப் பிரதேசங்களில் இத்துறையில் தங்கி வாழ்கின்ற கிட்டதட்ட ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன் இவர்களில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத் தொழில் ஏதுமின்றி அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்களாகவும் அரைகுறை நிவாரணத்தை நம்பி வாழ்வோராகவும் காணப்படுகின்றனர். வேறு வழியின்றிகரையோரங்களில் இன்று மீன்பிடியில் ஈடுபடுவோர் சுதந்திரமாக தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல முடியாதவர்களாகவும் உயிரைப்பணயம் வைத்துத் தமது தொழில் முயற்சிகளை மேற்கொள் வோராகவும் காணப்படுகின்றனர்.