Abstract:
யாப்பு என்ற சொல் பொதுவாக அமைப்பு ஆக்கம் என்னும் பொருண் மைகளை உடையது; சிறப்பாக இலக்கியக் கட்டமைப்பின் புறநிலையாகிய மொழிவடிவத்தைக் குறித்துப் பெருவழக்காகப் பயில்வது. தமிழிலே 'பா', உரை என இரு முக்கிய வடிவ நிலைகள் உள. பாவின் இயல்புகள் சில அமைந்த நூற்பா (சூத்திரம்) என்ற வடிவநிலையொன்றும் உண்டு. இவற் றுள் உரை என்பது. 'பாட்டிடை வைத்த குறிப்பு' முதலாக நால்வகைப் படும் எனத் தொல்காப்பியம் கூறும். 1 இந்த உரை பின்னர் நூல்களுக் குப் பொருள் விரிக்கும். பதவுரை, பொழிப்புரை, விருத்தியுரை முதலி யனவாகவும் கட்டுரை, புனைகதை முதலான ஆக்கங்கட்குரிய உரைநடை என்ற ஊடகமாகவும் தனிவளர்ச்சி பெற்றது. நூற்பா என்பது இலக்கணம், தத்துவம் தொடர்பானவற்றைக் கூறுவதற்குரிய செறிவான அமைப்புடைய தாகத் தொன்றுதொட்டுப் பயின்று வருகின்றது. இவற்றினின்று குறிப்பிடத் தக்க வேறுபாடுடையதான 'பா' வடிவமே தமிழிலக்கியப் பரப்பின் தலை யாய ஊடகமாகக் கடந்த நூற்றாண்டிறுதிவரை பயின்று வந்தது. இது 'பாட்டு' எனவும் வழங்கப்பெறும். மேற்படி பா, உரை, நூற்பா ஆகிய மூன்று வடிவநிலைகளையும் ' தொகுத்துச் சுட்டும் பொதுச்சொற்களாக யாப்பு, செய்யுள் என்பன தொல்காப்பியத்தில் பயின்றன. நாளடைவில் யாப்பு, செய்யுள் என்பன 'பா' வடிவத்துக்கு மட்டும் உரிமை பூண்டன வாகப் பொருட்சுருக்கம் எய்தின. யாப்பியல், செய்யுளியல் என்பன இயல் ஆகவே அமையலாயின. 2 இந்நிலையில், ஈண்டு யாப்பு, யாப்பியல். என்னும் சொற்கள் பா வடிவத்தையும் அது தொடர்பான சிந்தனைகளையுமே சுட்டியமைகின்றன. கடந்த ஏறத்தாழ இரண்டாயிரமாண்டுத் தமிழ் வர லாற்றில் இவை எய்திய பரிணாமத்தைத் தொகுத்து நோக்குவதாக இக் கட்டுரை அமைகிறது.