Abstract:
பாலின சமத்துவம் (Gender Equality) குறிப்பாக ஆசிய நாடுகளில் பேணப்படுவது குறைவாகவே உள்ளது என்ற கருத்து வலுவானதாக உள்ளது. இந்நாடுகளில் ஆணாதிக்க நெறிமுறைகளும் விழுமியங்களும், சமூக, பண்பாட்டு, பொருளாதார நிலைகளும் பாலின சமமின்மையை வலுவானதாக்கி வருகின்றது. அதிலும் கல்வி, சுகாதார துறைகளில் பாலின இடைவெளி இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனித வளப்பயன்பாட்டில், இருபாலாரும் பாலின சமத்துவத்தின் அடிப்படையில் தமது கடமைகளையும் உரிமைகளையும் செயற்படுத்தும் போதே ஒரு நிறுவனம் வினைத்திறன் மிக்க விளைவுகளை அடைய முடியும். இதன் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழகத்தின் சமூகவிஞ்ஞானக் கற்கைநெறியில், மனித வளப்பயன்பாட்டில் பாலின சமத்துவம் குறிப்பாக பணிச்சுமையில் பேணப்படுகின்றதா என்பதைக் கண்டறிதலே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாக உள்ளது. கடந்தகால ஆய்வுகள் பிரதான நிறுவனங்களில் பாலின சமத்துவத்தைப் பேணுதல் உலகளாவிய பிரச்சினையாக நோக்கப்படுகின்றது. எனினும் மனித வளப்பயன்பாட்டில் பாலின சமத்துவம் தொடர்பான சர்வதேச, உள்நாட்டு ஆய்வுகள் அரிதாகவே காணப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானக் கற்கைநெறியில் முகாமைத்துவ மற்றும் கலைப்பீட பிரிவில் உள்ள 17 துறைகளில் கல்விசார் பணியாளர்கள் நூறு பேருக்கு வழங்கப்பட்ட முதல்நிலை மூலமான வினாக்கொத்தின் மூலம் 65 பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. மாதிரிகளாக 65 பணியாளர்களில் 31 ஆண்களும், 34 பெண்களும் உள்ளனர். மாதிரி அளவைத் தீர்மானிப்பதற்கென பல கட்டமைக்கப்பட்ட முறைகள் கையாளப்பட்டுள்ளன. சிறிய அளவு கொண்ட சனத்தொகைக்கான புள்ளிவிபரங்கள், பிரசுரிக்கப்பட்ட அட்டவணைகள் மற்றும் சமன்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 'மனித வளப்பயன்பாட்டில் பாலின வேறுபாடு இல்லை' என்பது இவ் ஆய்விற்கான எடுகோளாக எடுக்கப்பட்டுள்ளது. இவ் எடுகோளைப் பரீட்சிப்பதற்கென தன்னிச்சையான மாதிரி t - test ஆனது SPSS மென்பொருளில் பயன்படுத்தப்பட்டது. மாறிகளுக்கிடையிலான ஒருமைப்பாட்டினைக் கண்டறிந்ததன் மூலம் மாறுபாடுகள் அனைத்தும் சமனாக இல்லை என்பது பரிசீலனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக சமூக விஞ்ஞானப் பிரிவின் பாலின மனித வளப்பயன்பாடு வேறுபாட்டினை காட்டியுள்ளது. ஆகவே முன்வைக்கப்பட்ட கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, யாழ் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானக் கற்கைநெறியின் கல்விசார் ஊழியர்களிடையே பணிச்சுமையில் பாலின சமத்துவம் பேணப்படுகின்றது என்ற முடிவினை எட்டமுடிகிறது.