Abstract:
ஆடைக் கைத்தொழிற்சாலையில் பணிபுரிகின்ற பெண்களின் வலுவூட்டலில் சமூக, பொருளாதார காரணிகள் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதையறிதலை ஆய்வு நோக்காகக் கொண்டது இவ் ஆய்வு. தமிழ்ப்பெண்களுக்கான கட்டுப்பாடுகளுடன் ஆடைக் கைத்தொழிற்சாலை வேலைக்குச் செல்வதையே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகத்தில், வேலைவாய்ப்பு ஊடாக பெண்களுக்கான வலுவூட்டலும் சமூக, பொருளாதார காரணிகளின் பங்கும் போதியதாக இல்லை என்பது ஆய்வுப் பிரச்சினை ஆகும். பெண் வலுவூட்டல் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் யுத்தப்பாதிப்புக்குள்ளானவர்களும் வேலைத்தெரிவு குறைந்தவர்களுமான, குறித்த பிரதேச ஆடைக் கைத்தொழிற்சாலைப் பெண்கள் தொடர்பாக எவ்வித ஆய்வும் சரியான முறையில் ஆராயப்படவில்லை என்பது ஆய்வு இடைவெளியாகக் காணப்படுகின்றது. நேர்காணல், வினாக்கொத்து மூலமும், இரண்டாம் நிலைத்தரவுகளை ஆடைக் கைத்தொழிற்சாலை நிறுவன அறிக்கைகளில் இருந்தும் பெற்றுக் கொண்ட இவ் ஆய்வு விபரணப் புள்ளிவிபரவியல், வரைபடங்கள், அட்டவணைகள் மற்றும் 5புள்ளி லிக்கேர்ட் அளவுத்திட்ட கூற்றுக்களாலான தீர்மான விதிப்பகுப்பாய்வு பயன்படுத்தப்பட்டு மாறிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வானது கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 4 கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இலகு மாதிரி மூலம் தெரிவு செய்யப்பட்ட 60 மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு, இவ் ஆய்வின் முடிவுகளாக பெண்களின் வலுவூட்டலைத் தீர்மானிப்பதில் சமூகக் காரணிகள் (கல்வியறிவு, மேலதிக திறன்கள், அனுபவம், குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை) நேரான செல்வாக்கினையும் பொருளாதாரக் காரணியான வருமானம் மற்றும் செலவு, பலவீனமான ஆனால் எதிரான தொடர்பையே காட்டுகின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ் ஆய்வானது பணிபுரியும் பெண்கள் தொழிற்சாலையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் என்பவற்றுடன் சமூகத்தில் பெண்களின் மீதான தவறான கண்ணோட்டம் என்பவற்றை குறித்த பெண்களுக்கும் சமூகத்திற்கும் விழிப்புணர்வூட்டுவதனால் முக்கியத்துவம் பெறுகின்றது.