Abstract:
'பாலினம்' என்பது இங்கு ஆண், பெண் ஆகிய இருபாலாரையும் சுட்டுகிறது. இவ்வாய்வுத்தலைப்பானது, கணபதிப்பிள்ளையின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண சமூகத்தில் அதன் செல்வாக்கு எவ்வாறிருந்தது என்பதை ஆராய்வதாக அமைகிறது. பேராசிரியர் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் (1903-1968) அக்காலத் தமிழ் அறிஞர் பெருமக்களுள் குறிப்பிட்டுக் கூறக்கூடியவர். பேராசிரியர் கடந்து வந்த காலப்பகுதி பற்றி ஆராய்வதென்பது நிகழ்காலத்தில் நிதானமாகவும், சிந்தித்தும் செயலாற்றுவதற்கும், எதிர்காலத்தை நோக்கிய சரியான திட்டமிடலுக்கும் வழிவகுக்கும். தமிழ் அறிஞர்கள் தொடர்பான ஆய்வானது தமிழ் இலக்கியச் சந்ததியினருக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் பயனளிக்கும் செயற்பாடாகும். அவ்வகையில், க.கணபதிப்பிள்ளை, செய்யுள் இலக்கியம், புனைகதை இலக்கியம், சிறுவர் இலக்கியம், நாடக இலக்கியம் என வகைப்படுத்தி நோக்கக்கூடியளவிற்கு இலக்கிய ஆளுமையுடையவர். இவர் தொடர்பாக, இவருடைய இலக்கியங்கள் தொடர்பாக ஆய்வுகள் நிகழ்த்தப் பட்டுள்ளபோதும் மேற் கூறப்பட்டுள்ள தலைப்பில் எந்தவொரு ஆய்வும் இடம் பெறவில்லை. பாலினச் சமத்துவமின்மையால் இன்று உலகளாவிய ரீதியில் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு, குறிப்பாகப் பெண்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இச் சூழ்நிலையில் பாலினச் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்காக உலகிலுள்ள ஒவ்வொருவரும் தம்மாலான விதத்தில் பங்களிப்புச் செய்யவேண்டிய கட்டாயத்திலுள்ளோம். பாலினச் சமத்துவத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இலக்கியங்களில் பாலினச் சமத்துவம் தொடர்பான சித்திரிப்பு மீதான கலந்துரையாடல்கள், ஆய்வுகள் என்பனவும் இன்றியமையாதன. காரணம், போர்முனையில் வேகமாகச் செயற்படும் கூர்வாளினை விடக் கூர்மையானது ஒரு எழுத்தாளனின் பேனா முனையிலிருந்து வெளிவரும் எழுத்துக்கள். அதிலும் நாடக இலக்கியங்கள் நடிப்புக்குட்படும் பொழுது, மக்களிடத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தி உடனடியாகச் சிந்திக்கத் தூண்டுகின்றன. பேராசிரியரின் பத்து நாடகங்களுள் மாணிக்கமாலை தவிர்ந்தவை நடிப்பதற்கு மட்டுமன்றி படிப்பதற்கும் உகந்தவை. அத்தனையும் பலமுறை மேடையேற்றப்பட்டவை. யாழ்ப்பாணம் அக்காலத்தில் 'சைவமலர்ச்சியே தேசிய மறுமலர்ச்சி' என ஆறுமுகநாவலரின் வழிவந்த, சாதிய அடுக்கமைவு கொண்ட, ஆணாதிக்க சமுதாயமாக இருந்தது. அதனால் பாலினச் சமத்துவமென்பது சிந்தித்துக்கூட பார்க்க முடியாமட்டத்தில் இருந்தது. எனினும், கணபதிப்பிள்ளை, அதனால் சமூகத்திற்கு ஏற்படும் சீரழிவுகளையும் பின்னடைவுகளையும் நாசூக்காகவும் நகைச்சுவையோடும் சிந்திக்கத் தூண்டும் வகையில் புலப்படுத்தி, அது சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியது என்பதை மக்களுக்கு தம்மாலான விதத்தில் புலப்படுத்த முனைந்துள்ளார். தமது நாடகங்கள் மூலம் பாலினச் சமத்துவ மேம்பாட்டிற்குத் தம்மாலான பணியினை மேற்கொண்டுள்ளார். ஆகவே வரலாற்றியல், விமர்சனவியல், சமூகவியல் அணுகுமுறைகளினூடு மேற்கொள்ளப்படும் இவ்வாய்வானது பேராசிரியரது நாடகங்கள் தொடர்பாகவும், யாழ் சமூகத்தின் பால்நிலை சமத்துவம் தொடர்பாகவும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவிருப்பவர்களுக்கு முன்மாதிரியாகவும் பயனுடையதாகவும் அமையுமென்பதில் ஐயமில்லை.