dc.description.abstract |
அன்பில் நிலைத்திருந்து, அன்னியரை வரவேற்று, விருந்தோம்பலில் ஈடுபடுவதனால் இறைவனின் அன்பைச் சுவைத்திட முடியும் என்பதே கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையாகும். அதுபோன்று விருந்தும், உபசரித்தலும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மணம் கமழ்கின்ற பண்புகளாகும். பசிக்கு உணவளித்தலில் இருந்து ஆரம்பிக்கும் விருந்தோம்பல் என்ற தமிழரின் பண்பாட்டையும் திருவிவிலியத்தில் லூக்கா நற்செய்தி முவைக்கும் விருந்தோம்பல் என்கின்ற வாழ்வியல் அம்சத்தையும் மீட்டுப் பார்ப்பதாக இவ் ஆய்வு முயற்சி அமைகிறது. மேலும் இன்று மருவிச் செல்லும் மனிதநேய பண்பாகிய விருந்தோம்பல் இயேசுக் கிறிஸ்துவின் உவமைகளின் பின்னணியில் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் உயரிய நோக்கையும் ஆய்வு எடுத்துரைக்கின்றது. மனிதர்களின் நல்வாழ்வுக்கு பண்பாட்டு விழுமியங்கள் அவசியமானவை என்னும் விடயம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கென திருவிவிலியத்தின் லூக்கா நற்செய்தியின் பின்னணியிலும் தமிழர்களின் பாரம்பரியங்களிலும் முன்வைக்கப்படுகின்ற விருந்தோம்பல் பண்புகளை ஒப்புநோக்கி, சமகாலத்தில் மருவிச் செல்லுகின்ற விருந்தோம்பல் பண்புகளை மக்கள் மத்தியில் மீண்டும் மறுமலர்ச்சி அடையச் செய்வதில் திருஅவையின் ஈடுபாட்டை வெளிக்கொணர்வதை இவ் ஆய்வானது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆய்வில் லூக்கா நற்செய்தி முன்வைக்கின்ற விருந்தோம்பல் பண்பானது இயேசுவின் பகிரங்கப் பணி வாழ்வு போதனைகளின் அடிப்படையில் ஆராயப்பட்டுள்ளது. குறிப்பாக மார்த்தா, மரியா ஆகியோர் இயேசுவை உபசரித்த முறையில் விருந்தோம்பலின் சிறப்புக்கள் தெளிவுபடுத்தப்படுகின்றது. தமிழர்களின் வரலாறு, அவர்களின் பண்பாட்டு விழுமியங்கள் என்பவற்றின் முக்கியத்துவத்தினை இனங்கண்டு, அவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சிகள் இலக்கியங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் ஆய்வு தெளிவுபடுத்துகின்றது. விருந்தோம்பல் தொடர்பாகப் பாரம்பரிய தமிழ் இலக்கியங்கள், குறிப்பாக ஈழத்துத் தமிழர் பாரம்பரியங்கள், கிறிஸ்தவ பின்னணி என்பவற்றை அறிவதற்கு நூல்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் ஆய்வுக்குட்படுத்தப்படுவதால் தொகுத்தறிவு முறையியல் இங்கு கையாளப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் பாரம்பரியத்திலும் லூக்கா நற்செய்தியிலும் எடுத்துரைக்கப்படுகின்ற விருந்தோம்பல் பண்பு ஒப்பு நோக்கு அடிப்படையில் முன்வைக்கப்படுவதனால் ஒப்பீட்டு ஆய்வு முறையியலும் கையாளப்பட்டுள்ளது. நலிவுற்றுச் செல்லுகின்ற விருந்தோம்பல் பண்பினைப் புத்துயிர் பெற்றுக் கொள்ளச் செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆய்வு செய்யப்பட்ட விடயங்கள் உய்த்துணர் முறையியல் மூலம் வெளிக்கொணரப்படுகின்றது. சமூகத்தில் பண்பாடுகள் வளர்க்கப்பட்டு, அவை சமூக மேம்பாட்டின் முன்னேற்றத்திற்குத் தளம் அமைத்துக் கொடுப்பது, மக்கள் மத்தியிலான உறவு நிலைகளில் வளர்ச்சிப் பாதையை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற பின்னடைவுகளும் ஆய்வில் ஆராயப்படுகின்றது. ஆய்வில் லூக்கா நற்செய்தி முன்வைக்கின்ற விருந்தோம்பல் பண்பும் தமிழர் பாரம்பரியங்கள் எடுத்துரைக்கின்ற விருந்தோம்பல் பண்பும் நடைமுறைப்படுத்தப்படுவதில் சில மாற்றங்களை உள்வாங்கியதாக அமைந்திருக்கின்றன என்னும் விடயமானது வெளிப்படுத்தப்படுகின்றது. இதன்மூலம் மனித உறவு நிலையைப் பாதிப்படையச் செய்கின்ற மனித செயற்பாடுகள், கலாச்சாரத்தின் செல்வாக்குகள் என்பவற்றைக் களைந்து புதிய உறவு வாழ்வினைக் கட்டியெழுப்புவதற்கு லூக்கா நற்செய்தி அழைப்பு விடுக்கின்றது. பண்பாடுகளை மழுங்கடிக்கச் செய்கின்ற சமூக ஆதிக்க சக்திகளுக்குள் அகப்படாமல் இருப்பதற்கு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களிடையே வேறுபாடுகள் இன்றி அனைவரும் ஒரே சமூகமாக இணைந்து செயற்படுகின்ற பொதுச் செயற்பாடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக விருந்தோம்பல் பண்பினை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்னும் முடிவுகளும் ஆய்வில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஆய்வில் மருவி வரும் விருந்தோம்பல் பண்பினை வளர்ப்பதற்கான பரிந்துரைகளை லூக்கா நற்செய்திப் பின்னணியில் புரிந்து கொள்வதற்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. |
en_US |