dc.description.abstract |
கத்தோலிக்கத் திருஅவையில் திருமணம் என்னும் அருளடையாளத்தின் மூலம் கணவன்,
மனைவியிடையே அன்புறவின் மேன்மையையும் திருமணத்தின் மாண்பையும் உணர்த்தும்
வகையில் திருமண முன்னாயத்த வழிகாட்டல் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கென
திருமணம் என்னும் அருளடையாளத்தைப் பெறத் தயாராகும் இளையோருக்குத் குறுகியகாலப்
பயிற்சியை மேற்கொள்ள ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் குடும்ப நலப் பணிக் குழுக்கள்
செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இது கத்தோலிக்க திருஅவையில் நடைமுறையிலுள்ள முக்கிய
விடயமாகும். யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் அகவொளி குடும்ப வளத்துணை நிலையம்
திருமணத்திற்கான தயார்ப்படுத்தல் வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது. வருடத்திற்கு 850
நபர்கள் இதனூடாகப் பயனடைகின்றனர். இவ்வாறான வழிகாட்டல்கள் வழங்கப்பட்ட
பின்னரும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் அதிகரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது. எனவே குடும்பங்களின் மகிழ்ச்சிக்கும் முன்மாதிரியான வாழ்க்கைக்கும்
திருமணத் தயார்ப்படுத்தல் தேவையா, இல்லையா? அத்துடன் முறையான பயிற்சிகளைப் பெற்ற
பின்னரும் குடும்பங்களிடையே பிளவு ஏற்படக் காரணம் என்ன? என்னும் வினாக்கள் ஆய்வின்
தேடலைத் தூண்டியது. இதனடிப்படையில் ஆய்வானது கத்தோலிக்கத் திருஅவையில் திருமணம்
என்னும் அருள் அடையாளத்தின் அவசியம், யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் அகவொளி குடும்ப
வளத்துணை நிலையம் நடத்தும் திருமண தயார்ப்படுத்தல் என்பன குறித்த தெளிவை வழங்கி,
அகவொளி குடும்ப வளத்துணை நிலையத்தின் திருமண முன்னாயத்த வழிகாட்டல்களை 2019
தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பெற்று திருமணப் பந்தத்தில்
இணைந்து கொண்ட குடும்பங்களில் பிளவுகள் ஏற்படக் காரணம் என்ன? என்னும் விடயம்
ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. இதற்கென நோக்கத்துடன் கூடிய எழுமாற்று முறையின்
அடிப்படையில் 40 நபர்களுக்கு வினாக்கொத்து வழங்கப்பட்டு பெறப்பட்ட தரவுகள்
பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆய்வுடன் தொடர்புடைய தரவுகள் மூல
நூல்கள், துணை நூல்களிலிருந்தும் பெறப்பட்டு, விடயங்கள் தொகுத்தறிவு முறையியலைக்
கையாண்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவதானிப்பு முறையியலினூடாக அகவொளி
நிலையம் நடாத்திய வகுப்புக்களில் கலந்துகொண்டு தரவுகள் பெறப்பட்டுள்ளது. திருமணத்
தயார்ப்படுத்தல் வகுப்புக்களில் கலந்துகொள்பவர்களில் நூற்றுக்கு 15 விகிதமானவர்களிடையே
பிளவுகள் ஏற்பட்டுள்ளமை அறியப்பட்டுள்ளது. அதற்கான கணவன், மனைவியிடையே நிலவிய
புரிந்துணர்வு இன்மை, தொலைத்தொடர்பு சாதனங்களின் முறையற்ற பாவனை, குடி மற்றும்
போதைப் பொருட்களின் பாவனை, பொருளாதார சிக்கல்கள், திருமணத் தயார்ப்படுத்தல்
வழிகாட்டல் வகுப்பில் கற்பிக்கப்படுபவை வாழ்வாக்கப்படாமை எனப் பல விடயங்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வில் திருமணத்தை
எதிர்கொள்பவர்களுக்கு நீண்டகால தயார்ப்படுத்தல் (இளைஞர், யுவதிகளுக்கான ஆயத்தம்),
உடனடி தயார்ப்படுத்தல் (திருமணத்திற்கு முன்னதான ஆயத்தம்) என இரு முறைகளில் திருமணத்
தயார்ப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சிறந்தது என ஆய்வில் பரிந்துரைக்கப்படுகின்றது.
மேலும் திருமணப் பந்தத்தில் இணையவுள்ள இளையோருக்கான வழிகாட்டலில்
பங்குத்தந்தையருக்கான பணியின் அவசியம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அகவொளி
நிலையத்தில் வழங்கப்படும் கல்வித் திட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டிய சில முக்கிய
விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே ஆய்வானது திருமணம் என்னும்
அருளடையாளத்தின் புனிதத் தன்மையைப் பேணவும், அதன் நீடித்த நிலைத்திருத்தலுக்கு
அகவொளி நிலையத்தில் வழங்கப்படும் திருமண வழிகாட்டல் பயிற்சிகள் அவசியம் என்பதையும்
உணர்த்தி நிற்கிறது. |
|