Abstract:
பல்கலைக் கழகம் என்பது, பாரம்பரிய நோக்கில், விதிக்கப்படுகின்ற பாடநெறிகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் பயிற்சி நெறிகளைத் தழுவிய தேர்வுகளின் முடிவாக, பட்டங்களையும், சான்றிதழ்களையும் வழங்கும் நிறுவனம் என விளக்கம் பெற்றது. அறிவியல் அரங்கில் இடம் பெறும் துறைகள் அனைத்தையுமோ அன்றி அவற்றுட் குறிப்பிட்ட சில வற்றையோ தான் அளிக்கும் பாடநெறிகளுள் அடக்கும் உரிமையினை அது பெற்றிருந்தது. அங்கு கடமை புரிந்த ஆசிரியர்கள். எவரது கட்டுப் பாட்டுக்கும் உட்படாது, தத்தம் துறைகளில் தமது கருத்துக்களை எடுத் தியம்பவும், வளர்க்கவும் உரிமை உடையவர்களாகக் கருதப்பட்டார்கள். கலை பயில்வோன் தனக்கு இயைந்த கலைத்துறை இதுவெனத் தெரிந்து அத்துறையில் நிரம்பிய புலமை பெறும் இடமாகப் பல்கலைக் கழகம் இயங்கியது. இவற்றுக்கெல்லாம் அடிப்படையான அறிவியற் சுதந்திரம் பல்கலைக் கழகக் கல்வியின் சிறப்பம்சமாகக் கொள்ளப்பட்டது.