Abstract:
19ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று தசாப்தங்கள் இலங்கையின் கல்வி நிலைமை பொறுத்து கிறிஸ்தவ மிஷனரியினருடைய பொற்காலமாகத் திகழ்ந்தது. அதனால் அக்காலப்பகுதி கிறிஸ்தவ சமயப் பண்பாட்டு ஆதிக்கம் மேலோங்கிய காலமுமாகவிருந்தது. அவ்வேளையில் தேசிய, சமய, சமூகப் பண்பாடு பெருமளவிற்கு உதாசீனம் செய்யப்பட்டது. இலங்கையின் தேசிய இனங்களாக விளங்கிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய மக்களுடைய மத, மொழி, இன, கலாசார அடையாளங்கள் தம்நிலை குன்றின. அத்தகையதோர் நிலையில் பிரித்தானிய அரசு கல்வியில் கடைப்பிடித்த குடியேற்ற நாட்டுக் கொள்கை, கிறிஸ்தவ மிஷனரியினரின் சமய, கல்வி நடவடிக்கைகள் போன்றவற்றின் காரணமாக சுதேசிகளிடையே இருந்து மறுமலர்ச்சியாளர்கள் சிலர் தோன்றினர். அவர்கள் தத்தமது மத, மொழி, கலாசார தனித்துவங்களை மீளவும் நிலைநாட்டுவதற்கு முயன்றனர். அதற்காகப் பல செயற்பாடுகளில் ஈடுபட்டபோது தேசிய மறுமலர்ச்சி உருவாகியது.