Abstract:
இயல், இசை, நாடகம் என மூன்று கலைகளும் சேர்ந்ததே முத்தமிழ் ஆகும். இம் மூன்று கலைகளும் ஓரிடத்தில் பயன்படுத்தப்படும் முக்கனிச்சாறு போன்ற கலையே இசைநாடகக் கலையாகும். இசைநாடகக் கலையானது பலரால் வளர்க்கப்பட்ட கலை எனினும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் முயற்சியாலேயே உலகப் புகழ் பெற்ற கலையாக ஏற்றம் கண்டது எனலாம். செந்நெறித் தமிழ் இசையிலும் செவ்வியல் தமிழிலும் நாடகக் கலையிலும் உயரிய திறன் கொண்டவராக விளங்கிய தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் இசைநாடகக் கலையை செந்நெறிக் கலையாக உருவாக்கி ஆற்றுகைப்படுத்தியதுடன் நாடகக் குழுக்களை உருவாக்கி எண்ணற்ற இளம் கலைஞர்களையும் உருவாக்கினார். இதனால் இசை நாடகக் கலையானது தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் மேடையேற்றப்பட்டது. ஆலயத் திருவிழாக்களிலும் நேர்த்திக் கடன் கழிக்கும் ஆலய நிகழ்வுகளிலும் கலை விழாக்களிலும் இசைநாடகக் கலையானது முக்கிய இடம்பெற்றது. தமிழகத்தில் பெரும் புகழ் பெற்றிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடகங்கள் முன்மொழிவதுமே இந்த ஆய்வின் பணியாகும். திரையிசைப் பாடல்களை இசைநாடக மேடைகளில் பாடுவோர் தற்காலத்தில் அதிகரித்து வருகின்றனர். பொது மக்கள் திரையிசைப் பாடல்களில் அதிக நாட்டமுடையோராக இருப்பதால் நாடகங்களில் அப்பாடல்களைப் பயன்படுத்துவதன் மூலம் நாடகக் கலையை செல்வாக்குப் பெறச் செய்யலாம் என்று சில நடிகர்கள் தவறாகச் சிந்திப்பதையும் அவ்வாறே செயற்படுவதையும் தற்காலத்தில் காணக்கூடியதாக உள்ளது. ஆய்வாளர் இசைநாடகக் கலைஞர் என்பதால் நேரடியாகக் கண்ட அனுபவத்தின் ஊடான தரவுகளும் இசை நாடகக் கலைஞர்களுடன் நிகழ்த்திய உரையாடல்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளும் இந்த ஆய்வை நகர்த்த உதவியிருக்கின்றன. இசை நாடகப் பிரதிகளில் எந்தவிதமான மாற்றங்களையும் மேற் கொள்ளாமல் அப்படியே பின்பற்றுவதன் மூலம் திரையிசைப் பாடல்களைத் தவிர்த்து மரபுவழி தவறாத இசைநாடக ஆற்றுகைகளை உருவாக்க முடியும் என்பதே இந்த ஆய்வின் முடிவாகும்.