Abstract:
வம்சங்களையும், தலை நகர்களையும் மையமாக வைத்து வரலாற்றைப் பகுத்து ஆராயும் மரபு வரலாற்றாசிரியரிடையே உண்டு. நம்நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இத்தகைய தலைநகர்களில் அநுராதபுரம் மிகப் பழையது மட்டுமன்றி நீண்ட காலம் நீடித்து நிலைத்த தலைநசராகவும் விளங்கியது. இதன் முதல் மன்னனாகிய தேவநம்பிய தீஸன் (கி. மு. 247-207) காலந் தொடக்கம் சோழராற் தோற்கடிக்கப்பட்ட ஐந்தாவது மகிந்தன் காலம் வரை (கி.பி. 993) இது தலை நகராக விளங்கியது. இது தலைநகராக விளங்கினாலும்கூட இதன் ஆரம்பகாலத்தில் குறைந்தது சில நூற்றாண்டு வரை நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் சிற்றரசுகள் தளைத்திருந்தன . பாக்குநீரிணையின் இக்கரையில் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி போன்று அக் கரையிலும் (தமிழ்நாட்டில்) சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் ஆட்சி யின்கீழ் தனி அரசுகள் நிலைபெற்ற காலத்தில் குறு நில மன்னராட்சி நிலை பெற்றிருந்ததும் வரலாறு. சுருங்கக்கூறின் திராவிடரின் பெருங்கற்கால கலாச்சார வழிவந்த பாக்குநீரிணையின் இருபகுதிகளிலும் கி. மு. 3ஆம் நூற் றாண்டில் ஏற்பட்ட அரசியல் வளர்ச்சி இஃதாகும். (Sitrampalam, S. K. 1980)
தமிழக வரலாற்றில் கி. பி. 6ஆம் நூற்றாண்டு ஒரு திருப்புமுனையாகும். இக்காலத்தில் எழுச்சி பெற்ற பல்லவ வம்சத்தின்கீழ் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக மாறிமாறி வம்சங்களால் ஆட்சி செய்வதற்கு வித்திடப் பட்டதோடு நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஏற்படுத்திய பக்தி இயக்கம் பௌத்தம், ஜைனம் ஆகிய மதங்களை நலிவுறச் செய்து இந்து மதத்தை யும் இந்துக் கலைகளையும் முன்னிலைக்கு இட்டுச்செல்லப் பின்வந்த பாண்டிய சோழ வம்சங்கள் இவற்றை வளர்த்தெடுத்தன. ஈழ வரலாற்றிலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஒரு முக்கிய காலகட்டமாகும். கிறீஸ்துவின் பிறப்பிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தமிழகத்தோடு அரசியல், கலாச் சார, வணிகத் தொடர்புகள் காணப்பட்டாலும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் தமிழக - ஈழ உறவுகளில் முன்பில்லாதவாறு ஒருவகையான இறுக்கம் காணப்பட்டது. முதலாம் தத்தோபதிஸ (கி. பி. 643-650), இரண்டாம் தத்தோபதிஸ (கி. பி. 650-667), மூன்றாம் அக்கிரபோதி (கி. பி. 633-643) தமிழகத்திலிருந்து கொண்டுவந்த படையினருதவியுடன் அரசுரிமை பெற்றனர். மானவம்மன் (கி.பி. 684-718) பல்லவ அரச உதவியுடன் தனது அரசுரிமையைப் பெற்றான். இவனது மூன்று மக் களும் பல்லவ அரண்மனையிலேயே பிறந்தோராவர். இதனால் கி.பி. 7 ஆம், 8 ஆம் நூற்றாண்டுகளில் அநுராதபுரத்தில் தமிழகச் செல்வாக்கு அதிகரித் துக் காணப்பட, பின்னர் ஏற்பட்ட பாண்டிய வம்ச எழுச்சியும் 9 ஆம் நூற்றாண்டில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது.