Abstract:
இலங்கையின் வன்னிப் பிரதேசம் 2924 சதுரமைல் பரப்புடையது. யாழ்ப்பாணக் குடாநாடும் தீவுகளும் தவிர்ந்த வடமாகாணப் பகுதியே வன்னிப் பிரதேசமென வழங்கப்படும். இதற்குத் தெற்கேயும் கிழக்கேயும் உள்ள சில பகுதிகள் வன்னிப் பிரதேசத்தினுள் அடங்குவனவெனக் கொள்ளப்படுகின்றபோதிலும் இவ்வாய்வு மேற்படி பிரதேசத்தையே வன் னிப் பிரதேசமெனக் கொள்கின்றது. இது இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 11 வீதத்தையும், வடமாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் 87.2 வீதத்தையும் கொண்டுள்ளது. மன்னார் மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம், வவுனியா மாவட்டம், யாழ்ப்பாணமாவட்டத்தின் வன்னிப் பகுதி (கிளிநொச்சி மாவட்டம்) என்பன இதனுள் அடங்கும். இவை நிர்வாகத்திற்காகப் பதினான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை மன்னாரில் நான்கும், முல்லைத்தீவில் நான்கும், வவுனியாவில் நான்கும், யாழ்ப்பாணமாவட்ட வன்னிப்பகுதியில் இரண்டு மாக அமைந்துள்ளன.
வன்னிப் பிரதேச விவசாய அபிவிருத்தி ஏலவே உள்ள விவசாய நிலங்களில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் புதிய நிலங்களை விவசாயச் செய்கைக்குட்படுத்தி விளைபரப்பினை அதிகரிப்பதன் மூலமும் பெறப்படலாம். இவற்றிற்கான வாய்ப்புகள் இங்கு நிறைய உள்ளன. எனினும் பிரதேசத்தின் பௌதிகச் சூழல், பண்பாட்டுச் சூழல் என்பன இந்நடவடிக்கைகளுக்குப் பல்வேறு தடைகளையும் கட்டுப்பாடுகளையும் விளை விக்கக்கூடியனவாக அமைந்துள்ளன.