Abstract:
ஈழவரலாற்றில் பொலநறுவைக் காலம் ஒரு திருப்புமுனையாக அமைந்தது எனலாம். அரசியற்றுறையை நோக்கும்போது இந்நாட்டில் ஏற்பட்ட தமிழ்ப் படை எடுப்புகள் உக்கிரமடைந்து காணப்பட்டதோடு பொலநறுவை ராசதானியின் வீழ்ச்சியில் இதுவரை ஒரு தலைநகரை மைய மாக வைத்து ஆண்ட மரபு மறைய, பல்வேறு தலைநகர்களை அமைத்து ஆளும் மரபு தலை எடுத்ததோடு வடபகுதியில் சுதந்திரத் தமிழ் அரசின் எழுச்சியும் கருக்கட்டிய காலமாகவே இக்காலம் அமைகின்றது. கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன் பிருந்தே தமிழகத்திலிருந்து ஈழத்தின் மீது படை எடுப்புகள் மேற்கொள்ளப்பட்டாலும்கூட அநுராதபுர காலத்தின் பிற் பகுதியில் அதுவும் குறிப்பாக கி.பி. 8ஆம், 9ஆம், 10ஆம் நூற்றாண்டுகளில் உக்கிரம் அடைந்தன. இத்தகைய நிலைக்கு மன்னர்களது வலிமையின்மை மட்டுமன்றித் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்குத் தென்னிந்திய படைப்பிரிவினர் தயவிலே தங்கியிருக்க வேண்டிய நிலையும் முக்கிய காரணி யாக அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அத்துடன் படை எடுத்தவர்கள்கூட இந்நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தத் தவறவில்லை என வும் சூளவம்சம் குறிப்பிடுகின்றது. உதாரணமாக, முதலாவது சேனன் (கி.பி. 831-51) அநுராதபுரத்தில் அரசாட்சியை மேற்கொண்டபோது சிறீ மாற சிறீவல்ல என்பவன் தலைமையில் இங்கு வந்த தமிழர் படை இங் குள்ள தமிழர்களது ஆதரவோடு நகரைச் சிதைக்க அந்நகர் யக்ஷர்களால் சூறையாடப்பட்ட நகர்போன்று காட்சி கொடுத்தது எனச் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இவ்வாறே தான் இவனுக்குப் பின்னர் ஆட்சிபீடமேறிய மன்னர் பலரும் வலிமையற்றவர்களாகக் காணப்பட்டனர். மூன்றாவது உதயன் (கி.பி.945-53) காலத்தில் பராந்தக சோழனின் படை எடுப்பு நிகழ்ந் தது. உதயன் ஒரு சோம்பேறி மட்டுமல்ல, குடிகாரனும்கூட. நான்காவது மகிந்தன் காலம் ஓரளவு அமைதி காணப்பட்ட காலமாக விளங்கினாலும் கூட, பின்வந்த ஐந்தாவது சேனன் (கி.பி.972-81), ஐந்தாவது மகிந்தன் (கி.பி. 981-1017) போன்றோர் வலிமையற்று இருந்ததோடு இவர்கள் காலத் தில் ஈழத்திலுள்ள திராவிடப் படைப்பிரிவினரின் கையும் ஓங்கியிருந்தது. இப்படையினர் கலகத்துக்கஞ்சி மகிந்தன் றோகனைக்கு ஓடவேண்டியிருந்தது. படையில் மட்டுமன்றிப் பொதுவாகவே தமிழர் செல்வாக்கு அநுராதபுர கால அரசின் இறுதிக் காலத்தில் மேலோங்கியிருந்தது. தமிழர் வசமிருந்த நிலங்கள் 'தமேழத்வலதெமின்' எனவும், தமிழர் வசித்த கிராமங்கள் ‘தமெல்- கம்மின் ' எனவும் தமிழரிடமிருந்து பெறப்பட்ட வரி 'தமெலகுழி' எனவும் இக்காலச் சான்றுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலை யில் தான் தென்னிந்தியாவில் பேரரசமைத்த சோழர் ராஜராஜன் தலைமை யில் (கி.பி. 985-1016) ஈழத்தின் மீது படை எடுத்தனர்.