Abstract:
நவீன உலகின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் பிரச்சினை யாகிய 'குறைவிருத்தி நிலை' பற்றி ஆராய்ந்துள்ள எஸ். பீ.டீ. டி. சில்வா, தமது நூலின் அறிமுகத்திற் குறைவிருத்தி நிலை என்பது ' - வரையறுக் கப்பட்ட ஓர் அரசியல்-வரலாற்றுச் செய்முறையின் விளைவு' என்றும் அக் காரணத்தினால் அதனை 'மரபு ரீதியான பொருளியல், அபிவிருத்திக் கோட் பாடு என்பவற்றிற்குப் புறம்பாகப் பலதரப்பட்ட துறைகளாகிய அரசியல், பொருளியல், வரலாறு, சமூகவியல் ஆகியவற்றையும் கணிப்பிற் கொண்டே ஆராய முற்படவேண்டும்' எனவும் எடுத்துக் கூறுகின்றார். ' அவ்வகையில் இலங்கையின் குறைவிருத்தி நிலையை உருவாக்குவதிலும் அது நீடித்திருப் பதிலும் இச்சக்திகள் பலவும் தனித்தனியாகவும் ஒருமித்த வகையிலும் பாரிய செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன, இன்றும் செலுத்துகின்றன. அதற்கா தாரமாக இலங்கையின் அபிவிருத்தி அநுபவத்திலிருந்து அநேக எடுத்துக்காட்டுக்களைச் சுட்டிக்காட்ட முடியும். அவற்றுள் அடிப்படைத் தன்மை வாய்ந்த ஒன்றாகிய முயற்சியாளர் வர்க்க எழுச்சி பற்றி ஆராய் வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முயற்சியாளர் வர்க்கமே நாடுகளில் இடம்பெறும் பொருளாதார மாறுபாடுகளுக்குரிய முன்னோடியாக என்றுமே திகழ்ந்து வந்துள்ளது. அரசாங்கக் கொள்கை முயற்சியாளரின் செயற்பாட்டைப் பாதிக்க வல்லதாயிருந்த போதும், பல சந்தர்ப்பங்களில், அவர்களே அரசாங்கக் கொள்கைக்குப் பொறுப்புடையவர்களாயிருந்தார்கள்; அல்லது அதன் மீது தமது செல்வாக்கைப் பிரயோகித்து அதனைத் தமது தேவைக்கேற்ப மாற்றியமைக்கக் கூடிய சக்தி பெற்றிருந்தார்கள். இலங்கை மாத்திரம் எந்த வகையிலும் அதற்கு விதி விலக்காயிருக்கவில்லை. உள் நாட்டு முயற்சி யாளர் வர்க்கத்தின் தோற்றம், வளர்ச்சி, அது மேற்கொண்ட முதலீ டுகள் என்ற யாவும் சுதந்திர இலங்கையின் பொருளாதார முன்னேற்றத் -தின் தன்மையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாயமைந்தன.
ஒரு குடியேற்ற நாடாயிருந்து சுதந்திரம் பெற்றதென்ற வகையில், இலங்கையின் முயற்சியாளர் வர்க்கம், பொதுவாக, அது போன்ற ஏனைய நாடுகளின் வர்க்கங்களையொத்த தொன்றெனக் கூற முடிந்தாலும், அதற்கே உரித்தான சில தனித் தன்மைகளும் இலங்கை முயற்சியாளர் வர்க் கத்திற்கு இல்லாமற் போய் விடவில்லை. அவ்வாறான தனியான பண்புகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை மாத்திரமன்றி அதன் சமூக அமைப்பு, அரசியல் வளர்ச்சி என்பவற்றையும் பெரிதும் செல்வாக்கினுக் குட்படுத்தி நாட்டின் பிரச்சினைகளை வேறான ஒரு பாதையில் திசை திருப்பி விடுவதற்குப் பொறுப்பாயிருந்தன. இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளின் பட்டியலில் உச்ச நிலையில் இருக்கும் இன நெருக்கடி கூட, நுணுகிப் பார்ப்பின், ஒரு வகையில் அத்தகைய செல்வாக்கின் விளை வென்றே கூறலாம்.