Abstract:
சைவ சித்தாந்தத்தின் காட்சிக் கொள்கையை ஆராய்வதாயமையும் இவ் வாய்வுரை சிவஞான சித்தியாரில் காணப்படும் ' அளவைப்' பகுதியினை ஆதாரமாகக் கொண்டதாகும்.
தற்கால அறிவாராய்ச்சிக் கொள்கைகள் போலல்லாது சைவசித்தாந்த அறிவுக் கொள்கைபற்றிய ஆய்வில் உளவியற்கருத்துக்கள் முக்கிய இடம் பெறுகின்றன. இத்தகையதோர் போக்கு இந்திய மெய்யியல் மரபிற்கேயுரிய ஒரு பொதுப்பண்பா கும். இந்திய உளவியற் கருத்துக்கள் பரிசோதனையை அடிப்படையாகக் கொள்ளாது பெருமளவு அனுமானங்களாகவே இருப்பதனை அவதானிக்கலாம். அவ்வனுமானங் களே அறிவுக் கொள்கைகளுக்கான முற்கற்பிதங்களாகவும் உள.
காட்சியின் மூலமாக தரப்படும் அறிவு எனும்பொழுது அனுபவம் அதனுள் அடங்கியது என்பது பெறப்படும். அனுபவத்தை வகையீடு செய்பவர்கள் (1) புலன் அனுபவம் என்றும் (2) புலன் கடந்த அனுபவம் என்றும் பாகுபடுத்துவர் காலம், வெளி என்ற பதார்த்தங்களுள் அடங்கும் காட்சி புலன் அனுபவம் சார்ந்தது. அவ்வாறு இல்லாதிருப்பவை புலன் கடந்த காட்சிசார்ந்தது என்றும் கூறிக்கொள் ளலாம். ஆனால் முன்னைய காட்சியின் வாய்ப்பினைப் பரிசோதிப்பதற்குப் பௌதிக உலக அடிப்படை இருப்பதுபோல, பின்னயதைப் பரிசோதிக்க எவ்வித அடிப்படை களும் இல்லை என்ற வலிமையான குற்றச்சாட்டுக் கூறப்படுகின்றது.