Abstract:
இடைக்காலத் தமிழ் நூல்கள் சிலவற்றிலே, தருமியென்னும் பிரமசாரி யொருவன் பொற்கிழி பெறும் பொருட்டு ஆலவாய் இறையனார் பாடல் ஒன்று பாடிக் கொடுத்தமை பற்றியும், அது தொடர்பாகப் பாண்டியனது சங்க மண்ட பத்திற் சிவபெருமானுக்கும் சங்கப் புலவரான நக்கீரருக்கும் நடந்த சம்வாதம் பற்றியும் சில செய்திகள் கூறப்பட்டுள்ளன.
சம்பக பாண்டியன் என்ற மன்னன் தன் மனைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையதெனக் கருதித் தன் மனக் கருத்தைப் புலப்படுத்தும் பாடலை இயற்றுப் வருக்குப் பொற்கிழி பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்ததும் ''கொங்குதேர் வாழ்க்கை '' என்று தொடங்கும் பாடலைத் தருமி அரசவையிற் பாடியதும், மங்கையர் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டென்று கூறிய அப்பாடலைக் கேட்டு மகிழ்ந்த மன்னன் தருமிக்குப் பொற்கிழியை வழங்குமாறு கட்டளையிட்டதும், நக் கீரர் குறுக்கிட்டுத் தடையெழுப்பத் தருமி இறைவனிடம் சென்று முறையிட இறைவன் வந்து நக்கீரருடன் வாதிட்டுத் தன் நெற்றிக் கண்ணால் நக்கீரரைச் சுட்டதும் அக்கதையின் பிரதான செய்திகள். நக்கீர சம்வாதம், தருமிக்குப் பொற் கிழி அளித்த கதை என்றெல்லாம் நமது இடைக்காலப் பௌராணிக இலக்கியங் களில் வழங்கும் இக்கதையின் சுருக்கம் பலருமறிந்திருக்கக் கூடியதே.
நவீன இலக்கிய கர்த்தாக்கள் பலரால் சிறு கதைகளாகவும், வானொலி நாடகங்களாகவும் பலமுறை அமைக்கப்பெற்ற இக்கதை சுவாரசியமானது என் பதில் ஐயமில்லை. மனிதனுடன் வாதிடவந்த கடவுள், இறுதியில் மானுட சக்தியை அமானுஷ்ய சக்தியால் அடக்க வேண்டியிருந்தது என்றும், அதனால் கலை இலக்கிய உலகில் உண்டாகிய தலைதடுமாற்றங்கள் எவ்வாறிருந்தன என்றும், இறைவனையே அது மானசீகமாக எவ்வாறு பாதித்தது என்றும் கற்பனை செய்யும் அற்புதமான ஒரு சிறு கதையைக் காலஞ்சென்ற கு. அழகிரிசாமி பல வருடங்களுக்கு முன் எழுதி யிருந்தார். ''வெந்தழலால் வேகாது' என்பது சதையின் பெயர். நக்கீரரின் ஆளுமையும் அதன் வெளிப்பாடும் இன்றுவரை இலக்கிய கர்த்தாக்களைக் கவர்ந்து வந்துள்ளமைக்கு அழகிரிசாமியின் கதை சிறந்த எடுத்துக்காட்டாகும்.