Abstract:
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தனது பாரதியறுபத்தாற்றில் மூன்று சுவாமிகள் பற்றிப் பாடியிருப்பது அறிதற்குரியதாகும். குள்ளச்சாமி, கோவிந்தசாமி, யாழ்ப்பாணத்துச்சாமி என அம் மூன்று பேரும் எடுத்தாளப்படுகின்றனர். இம் மூன்று பேரில் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் பற்றி பாரதியார் "ஜகத்தினிலோர் உவமையில்லா யாழ்ப்பாணத்துச்சாமிஜி என வெகுவாகப் போற்றிச் சிலாகித்துக் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கதாகும். இவ்வாறு பாரதியாரால் யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் எனக்குறிப்பிடப்படுபவர் யாரனும் கேள்வி இந்தியாவில் உள்ள அறிஞர்கள் மத்தியிலும் இலங்கை வாழ் அறிஞர்கள் மத்தியிலும் ஆராயப்பட்டு வந்துள்ளமை காணலாம். இலங்கைக்கும் இந்தியவிற்குமிடையில் பன்னெடுங்காலமாக அறிஞர்கள் , சித்தர்கள் சுவாமிகள் மத்தியில் நெருங்கிய தொடர்பு பேணப்பட்டு வந்துள்ளமை காணலாம். இவ்வகையில் யாழ்ப்பாணத்துச் சுவாமி எனப் சுப்பிரமணிய பாரதியாரால் கருதப்பட்டவர் யாரனும் கேள்விக்கு விடைகாண முயல்வதாக இவ் வாய்வு அமைகின்றது. பாரதியார் அமரத்துவம் அடைந்து ஏறத்தாள் நாற்பது ஆண்டுகளுக்குப் பிற்படவே யாழ்ப்பாணத்துச் சுவாமி யாரன்ற பிரக்ஞை இலங்கையில் அறிஞர்கள் மத்தியில் எழுந்ததென்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் தொடர்ச்சியில் பல துண்டுப்பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள் வெளிவந்துள்ளமை சுட்டத்தக்கதாகும். இவ்வாய்வானது இது தொடர்பான கருத்துக்களைத் தொகுத்து பகுத்தாராய்வு செய்து சுப்பிரமணிய பாரதியார் எடுத்தாண்ட யாழ்ப்பாணத்துச் சுவாமிகளை இனங்காட்ட முயல்கின்றது. இவ்வாய்வானது வரலாற்றாய்வு முறையியலையும் பகுத்தாராய்வு முறையியலையும் புத்தாக்க ஆய்வுமுறையியலையும் கைக்கொள்வதாக அமைகின்றது.