Abstract:
நவீன அரசியல் சிந்தனைகளில் அரசியல் அபிவிருத்தி என்கின்ற எண்ணக்கருவானது 1950களில் வளர்ச்சி அடைந்த போதும் இன்று அரசறிவியல் பாடப்பரப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்கின்ற தளமாகவுள்ளது. இவ் எண்ணக்கரு தொடர்பான புரிதலானது வளர்ச்சி அடைந்த மேற்குலக நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்குமிடையில் வேறுபட்டதாகவுள்ளது. அதாவது அரசியல் அபிவிருத்தி என்பது மேற்குலக நாடுகள் தமது சிந்தனைகளினையும் அரசியல் நலன்களினையும் மூன்றாம் உலக நாடுகளுக்கு கடத்துகின்ற ஒரு எண்ணக்கரு என்கின்ற ஒரு நிலை உள்ளது. ஒரு நாட்டின் அரசியல் ஒழுங்கமைப்பு, பொருளாதாரக்கட்டமைப்பு மற்றும் சமூக முறைமைகளின் விருத்தியடைந்த நிலையினைப் பற்றிய ஆய்வாக அரசியல் அபிவிருத்தி இனங்காணப்படுகின்றது. இறைமையுள்ள ஒரு நாட்டின் எல்லைப்பரப்புக்குள் வாழ்கின்ற மக்களது அரசியல், பொருளாதார மற்றும் சமூக ரீதியிலான வாழ்க்கைத்தரமானது உயர்ந்த தரத்தில் பேணப்பட வேண்டும் என்கின்ற நோக்கிலேயே அரசியல் அபிவிருத்தி என்கின்ற எண்ணக்கருவின் தோற்றம், வளர்ச்சி என்பன அடையாளப்படுத்தப்படுகின்றன. ஆனால் அரசியல் அபிவிருத்தி தொடர்பான நாடுகளுக்கிடையிலான மாறுபட்ட கருத்து நிலையே அரசியல் அபிவிருத்திக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கு பிரதான காரணமாக உள்ளது. அரசியல் அபிவிருத்தியிலுள்ள நேர்முறையான அம்சங்களினை தேசிய நலன்கள் மற்றும் பிராந்திய அரசியல் நலன்களுக்கு அப்பால் அனைத்து நாடுகளும் மக்களும் அனுபவிப்பதற்கான அரசியல் புறச்சூழ்நிலையானது தோற்றுவிக்கப்பட வேண்டும். இப் பின்னணியில் அரசியல் அபிவிருத்தி என்கின்ற எண்ணக்கருவானது இங்கு ஆராயப்படுகின்றது.