Abstract:
1930களின் தொடக்கத்தில் அரசியலினுள் பிரவேசித்த ஜீ. ஜீ. பொன்னம்பலம் 1944 ஆம் ஆண்டு அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தார். இலங்கைத் தமிழர் அரசியல் செல்நெறியில் முதன் முதலாக தோற்றம் பெற்ற அரசியல் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், 1977 ஆம் ஆண்டு வரைக்கும் ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தலைமைத்துவத்தின் கீழ் பல்வேறு தடங்களில் பயணித்து இற்றை வரைக்கும் இயங்கு நிலையில் உள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் சம பிரதிநிதித்துவ கோரிக்கையை முன்னிறுத்தி செயற்பட்ட ஜீ. ஜீ பொன்னம்பலம் சுதந்திரத்தின் பின்னர் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு என்ற கொள்கையை வலியுறுத்தினார். இருந்த போதிலும் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் தனிநாட்டுக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஜீ. ஜீ. பொன்னம்பலம் IO பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு இதில் தேர்தல்களில் எதிரணி வேட்பாளர்களைத் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கின்றார். குறிப்பாக 1934 தொடக்கம் 1960 வரை தொடர்ச்சியாக 26 வருடங்கள் சட்டசபை உறுப்பினராக இருந்த சாதனைக்குரியவர். 1949 இற்கும் 1953 ற்கும் இடையில் ஜீ. ஜீ. பொன்னம்பலம் கைத்தொழில், கடற்றொழில் அமைச்சராக இருந்த காலத்தில், காங்கேசன் துறை சீமேந்துத்தொழிற்சாலை, வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலை, போன்ற பல தொழிற்சாலைகள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் திறக்கப்பட்டன. அதே வேளை ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் சமபிரதிநிதித்துவக் கோரிக்கை தொடர்பாகவும், இந்திய வம்சாவழியினரின் பிரஜாவுரிமை தொடர்பான ஜீ.ஜீ பொன்னம்பலத்தின் நிலைப்பாடு பற்றியும் சமூகத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் நிலை பெற்றுள்ளன. இத்தகைய சந்தேகங்களை தெளிவுபடுத்தி, ஜீ.ஜியின் பலம், பலவீனம் ஆகியவற்றை அடையாளப்படுத்தி அதனூடாக ஜீ. ஜீலான்னம்பலத்தின் அரசியல் ஆளுமையை மீள்பார்வை செய்கிறது.