Abstract:
இலங்கைத்தீவில் நீர்ப்பாசனவியல் நாகரிகம் மற்றும் நீரியல் தொழினுட்பம் தோற்றம் பற்று அது தழைத்தோங்கிய காலம் வரைக்கும் அதாவது கி.பி.10ஆம் நூற்றாண்டு வரைக்கும் உள்நாட்டு - வெளிநாட்டு வாணிப நடவடிக்கைகள் பெருமளவிற்கு அரசநிறுவனங்களினுாடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தமையை இலக்கிய, சாசனவியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் கி.பி.10ஆம் நுாற்றாண்டினைத் தொடர்ந்து பொலனறுவை இராசதானியாக்கப்பட்டதன் பின்னர் இலங்கையின் பொருளாதார வலைப்பின்னல் அமைப்பில் அரச்சார்பற்றதும் சுதந்திரமானதுமான வணிக நிறுவனங்கள் பல நேரடியாக பங்கு கொண்டு, வாணிபத்தில் ஈடுபட்டு வந்திருந்தமைக்கான சான்றுகள் இலங்கைத்தீவு முழுவதிலுமிருந்து கிடைத்துள்ளன. அந்த வகையில் மத்திய கால இலங்கை மக்களின் பொருளியல் வாழ்க்கை முறையானது மைய ஆட்சிமுறையைத் தழுவியும், பிராந்தியப் பொருளாதார கூட்டு நிறுவனங்களாகத் தொழிற்ப்பட்ட வாணிக நடவடிக்கைகளைத் தழுவியும் சர்வதேச வணிக கூட்டுக்களின் இணைவுடனும் வளர்ச்சியடைந்திருந்தது. இலங்கை வரலாற்றில் மத்தியகாலம் என வரையறை செய்யப்பட்டுள்ள காலப்பரப்பானது பன்மொழி, பன்மத, பல்லினச் சமுதாயங்கள் வாழ்ந்த ஒரு காலகட்டமாக அமைந்தமை பாருளியல், பண்பாட்டுத்துறை வளர்ச்சிக்கான அடிப்படையாயிற்று. மத்தியகாலம் என வரையறுக்கப்படும் சமத்துவ - சமாதான காலத்தின் பாற்காலம் மகாயான பௌத்தத்தின் வளர்ச்சியுடன் மலர்ந்தது. இக்காலகட்டத்தில் இலங்கையில் அபரிமிதமாகத் தோற்றம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழியில் எழுதப்பட்ட சாசனங்கள் மற்றும் இலக்கிய வடிவங்கள் இவ்விடைக்காலத்தின் சிறந்த பாருளியல் வளர்ச்சியை உறுதிப்படுத்துகின்றன. இலங்கைத்தீவு அடங்கலாக இக்குறிப்பிட்ட வளர்ச்சி நிலை எட்டப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அபரிமிதமாகக் கண்டெடுக்கப்படும் மத்திய காலத்திற்குரிய தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் இப்லாருண்மியத்தின் வளர்ச்சி நிலையை உறுதிப்படுத்துகின்றன. இப்பின்னணியிலே உள் நாட்டு பொருண்மிய மையங்களான நகரங்கள், துறைமுகங்கள், கிட்டங்கிகள், தெருமூடி மடங்கள் எனப் பல்வகையான சமூக, பொருளாதார நிறுவனங்கள் போக்குவரத்து வலைப்பின்னல் அமைப்பினால் இணைக்கப்பட்பட்டிருந்தன. எனவே நீரியல்வள நாகரிகமொன்றின் பல்பக்கப் பொருளியல் வாழ்வுமுறையின் பங்காளிகளாக இலங்கை மக்கள் மாற்றமடைந்திருந்த அதேவேளை வடஇலங்கைத் தமிழ் மக்களும் இம்மத்திய காலப்பரப்பில் இலங்கையின் பொருளாதார விருத்தியில் பங்கெடுத்திருந்மையினை உறுதிப்படுத்த முடிகின்றது. வடஇலங்கைத்துறைமுகங்களில் இருந்தும், வழுக்கியாறு, தொண்டமானாறு போன்ற நீர்வழிப்போக்குவரத்திற்கு பயன்பட்ட பள்ளத்தாக்கு வெளிகளிலிருந்தும் கண்டுபிடிக்கப்லற்ற சாசன மற்றும் தொல்லியல், நாணயவியற் சான்றுகள் இம்மத்திய கால வடஇலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார விருத்தியை உறுதிப்படுத்தி நிற்கின்றன. இவ்வாய்வுக் கட்டுரையில் தொண்டமானாற்றுப்பள்ளத்ததாக்கின் பங்களிப்பு வடஇலங்கையில் இம்மத்தியகால பொருண்மிய விருத்தியில் கொண்டிருந்த நிலையை ஆராய்வதனையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.