Abstract:
இந்து மருத்துவவியலானது ஆயுர் வேதம், சித்தமருத்துவம் என இருபெருஞ் செல்நெறிகளினூடாக வளர்ச்சி பெற்ற அறிவுப்புலமாகும். ஆயுர்வேதமானது அதர்வவேதத்தின் கிளையாகவும் உபவேதங்களில் ஒன்றாகவும் மேற்கிளம்பி ஆத்திரேயர் மரபு, தன்வந்திரிமரபு என இரண்டு பிரதானமான சிந்தனைப் பள்ளிகளினூடாக வளர்ச்சி பெற்றது. நிலவியல் ரீதியாக இது வட இந்தியாவை மையப்படுத்தித் தோற்றம் பெற்றதாகக் திகழ்கின்றது.
தென்நாட்டில் குறிப்பாகத் தமிழகத்தில் சித்தர்களால் வெளிப்படுத்தப்பட்ட மருத்துவப்பனுவல்களை மூலங்களாகக் கொண்டு சித்தவைத்திய மரபு வளர்ச்சி பெற்றது. எவ்வாறாயினும் பழந்தமிழ் இலக்கியங்களினூடாகவும் பல்லவ, சோழ அரசர்களின் சாசனச் சான்றுகளினூடாகவும் மருத்துவக்கலை பற்றி பல்வேறு தகவல்களை அறியமுடிகிறது. இந்து மருத்துவவியலின் முக்கிய கிளைப்புலமாக அறுவைச்சிகிச்சையியலைக் குறிப்பிடலாம். அறுவைச்சிகிக்சையியல் பற்றிச் சிறப்பாக அறிய உதவும் காலத்தால் முற்பட்ட பனுவலாக சுஸ்ருதசம்ஹிதை விளங்குகிறது. இது தன்வந்திரி மரபுக்குரிய ஆயுர்வேதப் பனுவலாகும். குடற் சத்திரசிச்சை, சிறுநீரகக்கல் அறுவைச்சிகிச்சை, கண்புரை அகற்றல் அறுவைச்சிகிச்சை உள்ளிட்ட சிக்கலான அறுவைச்சிகிச்சை முறைகள் பற்றியும் அவற்றுக்குத் துணை செய்யும் பல்வகைக் கருவிகள் பற்றியும் சுஸ்ருதசம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அறுவைச்சிகிச்சைக்கென மயக்க மருந்து கொடுத்தல், அட்டை விடுதல் மற்றும் இறந்த மனித உடலத்தினைக் கொண்டு மனித உடற் கூற்றியல் பற்றிக் கற்றுணர்தல் எனப் பல்வேறு விடயங்கள் அறுவைச்சிகிச்சை தொடர்பில் இப்பனுவலில் எடுத்தாளப்பட்டுள்ளன.
சித்தவைத்திய மரபில் அகத்தியர் தொன்மத்தினை அடியொற்றி அறுவைச்சிகிச்சை முறைகள் பயின்று வந்துள்ளன. மகப்பேற்றுவைச் சிகிச்சை, கண் காசத்திற்கான சத்திர சிகிச்சை, மூளையில் ஏற்படும் கட்டிகளுக்கான அறுவைச் சிகிச்சை என அறுவைச்சிகிச்சை பற்றிய கருத்தியல்கள் சித்தவைத்திய மரபில் இழையோடியுள்ளன. சத்திரசிகிச்சைக்குப் பயன்படுத்தக்கூடிய பலவகையான ஆயுதங்கள் பற்றியும் சித்த வைத்தியப் பனுவல்களில் கருத்துரைப்பட்டுள்ளது. மேலும் அறுவைச்சிகிச்சையின் பின்னர் ஏற்படக்கூடிய ஏற்புவலி முதலிய பக்கவிளைவுகள் பற்றிய விழிப்புணர்வையும் அக்கால வைத்தியர்கள் அறிந்துணர்ந்து செயற்பட்டிருந்தமையினையும் அறிய முடிகிறது.