Abstract:
ஆய்வுச்சுருக்கம் தமிழ்க்காவிய இலக்கிய வரிசையில் கம்பராமாயணத்திற்குத் தனித்துவமானதோர் இடமுண்டு. காவியம்' என்ற இலக்கிய வடிவம் அவாவி நிற்கின்ற அத்தனை ஆக்கக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளமை இக்காவியத்தின் சிறப்பம்சமாகும். கம்பராமாயணம் குறித்த புலமைச் சிரத்தைகள் பெரிதும் அதனது பாடுபொருள் மீதே அதிகம் ஈர்க்கப்பட்டுள்ளன. கம்பனது மொழிநடை, அந்த மொழிநடையினைக் கட்டமைக்கும் ஆக்கக்கூறுகள் தொடர்பான ஆய்வுகள் பெரிதும் முனைப்படையாச் சூழல் ஆய்வுலகில் காணப்படுகின்றது. மொழிக்கையாட்சியில் கம்பனுக்கு நிகரான கவிஞர்களைக் காண்பது அரிதாகும். காவியப்படைப்பொன்றில் மொழிநடைக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தினை முற்றிலும் உணர்ந்த ஒரு நிலையில் தனது செய்யுட்களைக் கம்பன் படைத்துள்ளான். கம்பனின் மொழிநடையைச் சிறப்பிப்பவை அவனுடைய சொல்வளம், சொல்தேர்வு, சொற்கையாட்சி முதலானவை. இக்கட்டுரையானது கம்பனது சொற்கையாட்சித் திறனைத் தேர்ந்தெடுத்த கம்பராமாயணச் செய்யுட்கள் சிலவற்றினைத் துணைக்கொண்டு இனங்கண்டு சட்டமுனைகிறது.