Abstract:
தென்னாசியாவில் கோவில்கள் மனித வாழ்வின் உயிரோட்டமான மையங்களாகத் திகழ்ந்து '' வந்திருக்கின்றன. அவை காலங்களினூடே அவ்வவ் பிரதேச மக்களது வாழ்வு முறைகளை உருவாக்கி வளர்த்த களங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன. இத்தொழிற்பாடானது தென்னாசியப் பிராந்தியத்தில் . மனித நாகரிக வாழ்வின் ஆரம்பம் முதற்தொட்டே நிலைத்து வந்தமையையும் காணமுடிகின்றது. இப்பின்னணியில் தென்னாசியாவின் தென்கோடியில் விரவிக் காணப்படும். தொன்மை வாய்ந்த இந்துக்கோவில்களின் பங்களிப்புக்கள் பன்மொழி பேசும் மக்களது வாழ்வியலின் ஜீவனோபாய அடிப்படைகளை உருவாக்கிக் கொண்டிருந்தமையை இவ்வாய்வில் இடம்பெற்றுள்ள தோம்புக் குறிப்புக்கள் வாயிலாகக் கண்டுகொள்ள முடிகின்றது. ஈழத்தின் வடகீழ்த்திசையில் இசைமரபோடு இறையுணர்வினைப் பரப்பிக் கொண்டிருக்கும் திருக்கோணாதமலை கோணநாதேஸ்வரப் பதியின் பண்பாட்டுப் பதிவுச் சுவடுகள் இந்து மரபோடு இணையப்பெற்ற ஒரு பன்மைப் பண்பாட்டுச் சூழ்நிலையினை உருவாக்கி வைத்திருந்த முறையினை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக சோழர் காலப்பரப்பிலிருந்து பின்பற்றப்பட்ட கோயில் வழமைகள், காரியங்கள் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலும் பின்பற்றப்பட்டு, அதுவே பின்னர் ஒல்லாந்தர் காலத்திலிருந்து பதியப்பட்டுக் கிடைத்த தோம்பு ஆவணங்களாகவும் அவையே பின்னர் ஆங்கிலேயர் காலத்து கோயிற் பதிவேடுகளாவும் மாற்றுவிக்கப்பட்ட நிலையில் இன்று எமக்குக் கிடைத்துள்ளன. வடமராட்சி வியாபாரி மூலையில் வாழ்ந்து, மறைந்த அமரர் சி.நா. சொக்கநாதபிள்ளையிடமிருந்து எம்மால் பெற்றுக்கொள்ளப்பட்ட அத்தகைய தோம்புச் சுவடிகள் ஊடாகவே திருகோணாதமலை கோணநாதேஸ்வரர் திருக்கோயிலின் கோயிற்காரியங்கள் மற்றும் அசையும் அசையாச் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் கொண்டதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பின்பற்றப்பட்ட ஆய்வு முறையானது வரலாற்று மூலங்களூடான விபரண ஆய்வு முறையியலாக அமைந்துள்ளது.