Abstract:
ஆய்வுச் சுருக்கம் உலக மயமாக்கத்தின் பல விளைவுகளில் ஒன்று நாடுகளுக்கு இடையில் மூலதனம் மட்டுமன்றி ஊழியமும் குறிப்பிடக்கூடிய அளவில் இடம்பெயர்ந்து அன்னிய செலவணியை தாய்நாட்டிற்கு ஈட்டிக்கொடுக்கின்றது. இந்த வகையில் இக்கட்டுரையானது இலங்கையின் மனிதவளம் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் ஈட்டுகின்ற அன்னியச் செலவாணியை எடுத்துக் கூறுகின்றது. இந்த ஆய்வுப்பரப்பில் இலங்கை தொடர்பாக பலர் ஆய்வுகளை செய்தபோதும், வடக்கு - கிழக்கு மக்களை குறிப்பாக தமிழர்களை மையப்படுத்திச் செய்யப்பட்ட ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. வெளிநாட்டு பண அனுப்புதல்கள் இலங்கையின் வெளிநாட்டு வருவாயில் முதல் நிலைகளில் பிரதான வகிபாகத்தைக் கொண்டுள்ளது. இச்சம்பாத்தியத்தில் இலங்கையின் புலம்பெயர் தமிழ் மக்கள் ஈட்டுகின்ற அன்னிய செலவாணி அதிகமாக காணப்படுகின்றது. ஏறத்தாழ இரண்டு மில்லியன் இலங்கையர்கள் இதில் ஒரு மில்லியன் இலங்கைத் தமிழர்கள் வெளிநபாடுகளில் வாழ்வதாக மதிக்கப்படுகின்றது. இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு பணம் சம்பாதித்தல், உள்நாட்டு இனமுரண்பாடுகள் மற்றும் யுத்தம், கல்வி, தொழில் எதிர்பார்க்கைகள், சாதிவேறு பாடுகள், சமுதாய ஒடுக்க முறைகள், வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டதால் ஏற்பட்ட வறுமை, கல்வியில் தரப்படுத்தல் மற்றும் கோட்டா முறைமை வேலையற்ற நிலை , மீன்பிடி பாதிக்கப்பட்டமை, வாழ்விடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக மாற்றப்பட்டமை, குடிமனைகள் அழிக்கப்பட்டமை, அச்சுறுத்தல்கள், பாதுகாப்பின்மை மற்றும் குடியேற்ற பின்னணிகள் போன்றன காரணமாக அமைந்துள்ளன. இவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பும் நிதியானது நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் சராசரியாக ஏழுவீதம் என்பதோடு இது நாட்டின் தொடர்ச்சியான நிலையான வருமான அதிகரிப்பாகவும் ஏனைய வெளிநாட்டு வருமான மூ லங்களைவிட அதிகமாகவும் காணப்படுகின்றது. இது பொருளாதார வளர்ச்சிக்கு உள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் அதிகளில் கனடாவில் வாழ்கின்றனர். வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் வருவாயை வீடு கட்டுதல், சீதனம் கொடுத்தல், தங்கநகை செய்தல், காணி கட்டிடங்களை வாங்குதல், மோட்டார் சைக்கில்கள் வாங்குதல், விலையுயர்ந்த தொலைபேசிகள் வாங்குதல், கோயில்களுக்கு செலவு செய்தல், வீட்டின் பங்களிப்பதாகவும் நன்மை தீமைகளுக்கு செலவு செய்தல், சிறு தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல் மற்றும் வங்கிகளில் நிலையான வைப்புக்களில் இடுதல் போன்ற நுகர்வு செலவுகளையும் முதலீட்டு செலவுகளையும் செய்கின்றார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு யுத்தம் ஏற்படுத்திய இந்த நிதியியல் பலத்தை பொருளாதார திட்டமிடலாளர்கள் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும்.