dc.description.abstract |
இலங்கையில் நிகழ்ந்த முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 150,000 அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தல் (2012) வட மாகாண சபைத் தேர்தல் (2013) மற்றும் பாராளுமன்ற பொதுத் தேர்தல்களில் (2015) தமிழ் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இது 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணசபைக்கு நடாத்தப்பட்ட இரண்டாவது தேர்தலும், வடமாகாண சபைக்காக நடாத்தப்பட்ட முதல் தேர்தலுமாகும். உள்நாட்டு யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் முடிவடைந்த காலத்திலிருந்து சர்வதேச சமுதாயம் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்த உயர் அழுத்தத்தினால் இரு மாகாணசபைகளுக்குமான தேர்தல்கள் நடைபெற்றன. இதனால் இத்தேர்தல்கள் தேசிய ரீதியாகவும், சர்வதேசரீதியாகவும் அதிக கவன ஈர்ப்புக்குள்ளாகியிருந்தன. இலங்கையின் இனமோதலுக்கான மூலகாரணங்களைக் கண்டுபிடித்து அதற்குப் பொருத்தமான அரசியல் தீர்வினை உருவாக்குவதில் எல்லாத் தரப்பும் இன்று வரை தோல்வியடைந்திருந்தாலும், குறைந்தபட்ச அதிகாரத்தினைக் கொண்டியங்கும் ஏனைய மாகாண சபைகளைப் போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபைகளை இயங்குவதற்கான ஆணையினைத் தேர்தல் மூலம் மக்கள் வழங்கினர். உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தல் முப்பது வருடங்களாக தொடரும் இலங்கையின் இனமோதலுக்கான அரசியல் தீர்வினை முன்னோக்கி நகர்த்துவதற்கான முக்கியமானதொரு தேர்தலாகத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் கருதப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்விற்கான தனது முன்மொழிவுகளை இத்தேர்தல் விஞ்ஞாபனமாக முன்வைத்து மக்கள் ஆணையினை கோரியது. அரசியல் உரிமைகளுக்கு மேலாக எதனையும் தாம் எதிர்பார்க்கவில்லை என்பதை வடக்கு, கிழக்கு மாகாணசபைத் தேர்தல்கள், மற்றும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கும், உலகத்திற்கும் அறிவித்தனர். இதன் மூலம் யுத்தவலயமாக இருந்த வடமாகாணம் தொடர்பாக கணிப்பிடப்பட்டிருந்த தவறான மதிப்பீடுகளுக்கு வடமாகாணசபைத் தேர்தலும், பாராளுமன்றத் தேர்தலும் முற்றுப்புள்ளி வைத்தன. ஆயினும் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தினை உருவாக்குவதில் பொறுப்புடன் செயற்படவேண்டிய இலங்கை அரசாங்கம் அதிகாரப்பகிர்வுமூலமான நல்லிணக்கத்தினை உருவாக்குவதில் தொடர்ந்தும் தோல்வியடைந்தது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த நல்லாட்சிக்கான ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றினூடாகப் பயணிக்க விரும்பி மக்கள் கருத்துக்களைக் கோரியுள்ளது. இலங்கையின் இனமோதலின் வரலாறு முழுவதிலும் இனவழித்தேசியவாத உணர்வுகளால் நிரம்பியிருந்தது. இதன் தொடர்ச்சியாகவன்றி புதிய கலாசாரத்தைப் படைக்க புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கிறது. இந்நிலையில் நாட்டின் அமைதி, சமாதானம், நல்லிணக்கம் என்பனவற்றினைப் பெற்றுக்கொள்ளக் கருத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், புதிய யாப்பு உள்ளடக்கியிருக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இக்கட்டுரை ஆய்வு செய்கிறது. |
en_US |