Abstract:
புறவய நிலையில் இலங்கைத் திருச்சபை வரலாறு பற்றிக் கூறும் ஆவணங்களுக்கு குறிப்பாக போர்த்துக்கேயர் ஆட்சிக்காலம் பற்றிக் கூறும் ஆவணங்களுக்குப் பொருள் விளக்கமளிப்பதில் பல சவால்களும் சிக்கல்களும் எதிர்கொள்ளப்படுகின்றன என்னும் விடயமே இங்கு முன்வைக்கப்படுகின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற முதன்மை ஆவணங்களை ஆக்கியவர்கள் போர்த்துக்கேய மிசனரிமாரே அல்லது மறை அறிவிப்புப் பணியில் நெருங்கிய ஈடுபாடு கொண்டவர்கள். மேலும், போர்த்துக்கால் மன்னனின் ஆதரவுடன் இடம்பெற்ற மறைபரப்புப் பணி பற்றிய அறிக்கைகள் மன்னனைத் திருப்திப்படுத்தும் நோக்கில் தயார் பண்ணப்பட்டவை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டியது. அத்துடன் இடம்பெற்ற மறைபரப்புப் பணிகள் ஐரோப்பிய மேலாண்மைப் பின்னணியிலேயே இடம் பெற்றன. அத்தோடு மறையைத் தழுவிய சுதேசிகள் பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, அதாவது அதிக சலுகைகளை போத்துக்கல் மன்னனிடமிருந்து பெறுவதை அடிப்படையாகக் கொண்டே மதம் மாறினர். இதனால் ஆவணங்களில் பல விடயங்கள் மறை பரப்பாளர் சார்பாக மிகைப்படுத்தப்பட்ட தகவல்களாகவே காணப்படுகின்றன. மேலும், மிகமிகக் குறைந்த எண்ணிக்கையிலான போர்த்துக்கேய மிசனரிமாரே இக்காலத்தில் தமிழ்மொழியைக் கற்றிருந்தனர். புதிய மறையைத் தழுவியவர்கள் அம் மறையின் கோட்பாடுகளை புரிந்து கொண்டார்களா என்பது பொருத்தமான வினாவாகும். எனவே மேற் குறிப்பிட்டுள்ள விடயங்களின் பின் புலத்தில் இடம்பெற்ற மத மாற்றங்கள் உண்மையான மத மாற்றங்கள் எனக் கொள்ள முடியுமா? அதே வேளை உண்மையான மதமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதற்கும் மன்னர் மறைசாட்சிகள் பற்றிய சம்பவம், ஒல்லாந்து கிழக்கிந்தியக் கொம்பனியினரின் கெடுபிடிகள் மத்தியிலும் கத்தோலிக்கம் கடைப்பிடிக்கப்பட்டிருந்தமை சிறந்த எடுத்துக்காட்டு. இப்பின்னணியிலேயே போர்த்துக்கேயர் காலத்து ஆவணங்களுக்குப் பொருள் விளக்கமளிப்பதில் பல சவால்கள் எதிர்நோக்கப்படுகின்றன என்னும் கருத்து முன்வைக்கப்படுகின்றது.