Abstract:
ஈரடிகளால் வாழ்க்கைத் தத்துவத்தைப் போதித்தவரும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழும் திருவள்ளுவர் தமிழுக்குத் தந்த நிலையான சொத்து திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பால் கொண்டு வாழ்வின் அனைத்துச் சூழலுக்கும் பொருந்தும், அனைத்துக் காலத்துக்கும் பொருந்தும் விடயங்களை திருக்குறள் தந்தமையினாலேயே இந்த நவீன உலகிலும் வள்ளுவர் நீடு வாழ்கின்றார். ஆய்வாளரின் இந்த ஆய்வானது திருக்குறளில் திருவள்ளுவர் எவ்விதம் தொடர்பாடல் தொடர்பில் எவ்வாறான கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார் என்பதினை அறிதலாக அமைந்தது. 1330 குறட்பாக்கள், அவை அனைத்தும் 133 அதிகாரங்களில் உள்ளடக்கம் பெற்றுள்ளன. திருக்குறள் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றுள் திருக்குறளானது தொடர்பாடல் தொடர்பாக எவ்வாறான கருத்தினை மற்றும் எண்ணத்தினை வெளிப்படுத்துகின்றன, என்பதை அறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. இந்த ஆய்வின் எல்லையாக திருக்குறளில் தொடர்பாடல் தொடர்பாக விளக்கியுள்ள குறட்பாக்கள் மாத்திரம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் கருதுகோளாக திருக்குறள் பல் வேறுபட்ட விழுமியக் கருத்துக்களை முன்வைத்துள்ளது அவற்றுள் தொடர்பாடலினை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதினையும் விளக்கியுள்ளது. அவை தொடர்பாடலை சிறப்பாக மேற்கொள்ள துணைபுரிகின்றன. இன்று தொடர்பாடல் தொடர்பாக பல்வேறு புத்தகங்கள், ஆய்வுகள் வெளிவந்தாலும் எமது ஆரம்ப தமிழ் வரலாற்றிலே தோற்றம் கண்ட திருக்குறளில் தொடர்பாடல் தொடர்பாக முக்கிய விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், இந்த ஆய்வானது பகுப்பாய்வு, விபரண ஆய வு முறையியல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின் மூலாதாரமாக திருக்குறளில் தொடர்பாடல் தொடர்பாக எழுதப்பட்ட 12 அதிகாரங்கள் அமைந்துள்ளது. இரண்டாம் நிலைத் தரவுகளாக இந்த ஆய்வுப் பொருண்மையோடு தொடர்புடையதான நூல்கள், ஆய்வு நூல்கள், கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என்பன அமைகின்றன. இத்தகைய ஆய்வுகள் மூலம் வள்ளுவரிடத்தே தொடர்பாடல் பற்றிய சிந்தனை இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு, அச்சிந்தனைகளும் தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தகைய ஆய்வுகள், வள்ளுவரின் எதிர்வு கூறும், விஞ்ஞானத் தன்மை வாய்ந்த சிந்தனைகளை வெளிக் கொணர்வதோடு, தொடர்பாடலை வெற்றிகரமாக மேற்கொள்ளவும் வழிகாட்டும் எனலாம்.