Abstract:
ஆசியாக் கண்டத்தில் தென்னாசியாவிலேயே அதிகளவிலான சுற்றுலாமையங்கள் காணப்படுகின்றன. எனினும் ஆசியாவின் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் சுற்றுலாத்துறையானது சுற்றுலா முகவர்களினாலேயே விருத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்தியில் சுற்றுலாத்துறையானது சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துமென இலங்கையில் சுற்றுலாத்துறை தொடர்பாக ஆய்வினை மேற்கொண்ட ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நடைமுறையில் காணப்படும் சுற்றுலாத்துறையானது சூழல் தொகுதி, சுற்றுலாமையத்தின் கலாசார அடையாளம், தூய்மையான கடல் மற்றும் கடற்கரை, அதிகளவான இயற்கை மற்றும் கலாசார விடயங்கள், விடுமுறை, சேவைகளின் தராதரம் போன்ற பல்வேறு விடயங்களில் முக்கிய கவனம் செலுத்துகின்றது. இலங்கையின் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கௌதாரி முனையானது சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல அம்சங்களைக் கொண்டுள்ளது. எனினும் கௌதாரி முனையில் சூழல் சார் சுற்றுலாத் துறையை விருத்தி செய்வதற்கு ஏதுவாகக் காணப்படும் வள வாய்ப்புக்கள் தொடர்பாக மிகக் குறைந்தளவான ஆய்வுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது இப் பகுதியில் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வதில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தினைச் செலுத்துகின்றது. இவ் ஆய்வானது கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரி முனையில் சூழல் சார் சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கு ஏதுவாகக் காணப்படும் உள்ளார்ந்த வள வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அங்கு காணப்படும் சூழல் சார் சுற்றுலாத் துறையின் தற்போதைய நிலை தொடர்பாகவும் வெளிப்படுதுவதனை நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இவ் ஆய்வானது முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். குறித்த இவ் ஆய்விற்கான தரவுகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்வதற்கான நபர்கள் நோக்க அடிப்படையிலான மாதிரி முறையில் தெரிவு செய்யப்பட்டனர். சேகரிக்கப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்கள் பண்பு ரீதியாக பகுப்பாய்வு செய்யப்பட்டு விவரணரீதியாக கொடுக்கப்படுள்ளது. இவ் ஆய்வின் பிரகாரம் கௌதாரிமுனை அதன் புவியியல் ரீதியான அமைவிடம் காரணமாக சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளதென்பதனை அறிய முடிகின்றது. எனினும் இப் பிரதேசமானது உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப்பயணிகள் மத்தியில் அறியப்பட்ட ஒரு பிரதேசமாகக் காணப்படாமையால் இங்கு சூழல்சார் சுற்றுலாத்துறை விருத்தியை மேற்கொள்வதற்கு ஏதுவாய் காணப்படும் வளங்களை பயன்படுத்தி வருவாயை உருவாக்குவது மிகக் கடினமானதாகவே உள்ளது. மேலும் குறித்த ஆய்வுப் பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் விருத்தி செய்யப்படாமையினாலும் சூழல்சார் சுற்றுலாத்துறை விருத்தி பாதிக்கப்பட்டுள்ளது.