Abstract:
சமகாலத்தில் தமிழ் இலக்கியப் படைப்புலகும் ஆய்வுலகும் உலக இலக்கியக் கருத்தாக்கங்களுடன் தம்மைத் தொடர்புபடுத்திக் கொண்டுள்ளன. இது அறிவியல் வளர்ச்சி, மனித சிந்தனை அகற்சி , மனிதப் பரம்பல் முதலானவற்றின் உடன் விழைவாகும். தவிர்க்க முடியாத இவ்வளர்ச்சி நிலை இலக்கியங்களின் உற்பத்தி மற்றும் ஆய்வுகள் தொடர்பாக கணிசமான பாதிப்பினை ஏற்படுத்தியிருப்பதனை உணரலாம். இப்பாதிப்பு என்பது ஒரு புறத்தில் நன்மையானதாக அமையும் அதேவேளை மறுபுறத்தில் தமிழ் இலக்கியங்களின் தனித்துவம், அடையாளம் குறித்த பாதகமான கருத்து நிலைகளின் வளர்ச்சிக்கு உரங்கொடுப்பதாகவும் அமைந்து விடலாம் எனக் கருதப்படுகின்றது. எனவே உலக இலக்கியக் கருத்தாக்கங்களுடன் தமிழ் இலக்கியங்களைப் பொருத்திப் பார்ப்பதில் கூடுதல் அவதானமும், அக்கறையும், முன்னெச்சரிக்கையும் தேவைப்படுகின்றன. இதனால் கீழைத்தேயமொழிகள் மற்றும் கலை, இலக்கியம், பண்பாடு குறித்து அக்கறை செலுத்தும் கீழைத்தேசவியல் (Oriantalism), பின்காலனித்துவம் (Post - Colonialsm) எனும் கோட்பாடுகள் மற்றும் தேசிய இலக்கியம்' பற்றிய எண்ணக்கருத்துக்களின் வழி உலக இலக்கியக் கருத்தாக்கங்களைத் தமிழ் இலக்கியச் சூழலுக்குள் பொருத்திப் பார்ப்பது பயனுடையதாக அமையும். இதனால் தமிழ் இலக்கியப் படைப்புக்களும் அவை குறித்த ஆய்வுகளும் மேலும் ஆழமும் விரிவும் பெறும் எனலாம்.