Abstract:
மனிதப்படுகொலை, இனப்படுகொலை மூலம் பல இலட்சம் மக்கள் தமது வாழ்க்கையினை இழந்துள்ளார்கள். பல இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள். ருவேன்டாவில் சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மிகவும் பாரியளவில் மீறப்பட்டமையினை தடுக்க முடியாது ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்தபோது அது முழு உலகிற்குமான தோல்வியாகியது. சிரியா மற்றும் இலங்கையில் வன்னி மக்களுக்கு ஏற்பட்ட துன்பம் இதற்கு மேலும் சாட்சியாகவுள்ளது. மோதலுக்கு சிக்கியுள்ள மக்களைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை செயற்பாட்டுத்திட்டம் ஒன்றை உருவாக்கியது. இச்செயற்பாட்டுத்திட்ட அறிகையில் “மோதல் என்பது ஒரு சோதனை. இது அங்கத்துவ நாடுகளுக்குரிய சோதனையல்ல, பதிலாக ஐக்கிய நாடுகள் சபை தனது பொறுப்பினை நிறைவு செய்வதற்கும், தனது முழுமையான வலுவினைப் பயன்படுத்தி திறமையினை நிலைநிறுத்துவதற்கும் மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான சோதனையாகும்." எனத் தெரிவித்துள்ளது மனிதப்படுகொலைகள் மற்றும் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை தரமுயர்த்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அனேக சிபார்சுகளை பல வருடங்களாக முன்மொழிந்து வருகின்றது. ஆனால் அண்மைக்காலத்தில் ருவேன்டா இனப்படுகொலை இலங்கையின் இனப்படுகொலை, சிரியா மனிதப்படுகொலை போன்றவற்றை தடுப்பதில் ஐக்கிய நாடுகள் தோல்வி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ருவென்டா, இலங்கை, சிரியா, செர்பெனிக்கா போன்ற நாடுகளில் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் தொடர்பாக உள்ளக விசாரணை நடாத்தப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு ரீதியாக தோல்வியடைந்துள்ளதாக விசாரணை அறிக்கைகள் கூறுகின்றன. பாடங்கள் பலவற்றைக் கற்றும், முறைப்படுத்தப்பட்ட நிறுவனமாக ஐக்கிய நாடுகள் சபை தன்னை இதுவரை மீளமைத்துக் கொள்ளவில்லை என்ற மையப் பொருள் இங்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளது.