Abstract:
உலகில் ஏராளமான மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அம்மக்கள் தத்தமது வாழ்வியல் முறைகளை ஏனைய மக்களுக்குத் தெரியப்படுத்த இசையை ஓர் ஊடக சாதனமாகப் பயன்படுத்துவதன் காரணத்தினாலேயே இசை உலகப் பொதுமொழியாகக் கருதப்படுகின்றது. இன்று உலகில் வாழ்கின்ற மக்களில் மிகவும் காலத்தால் முந்தியவர்கள் தமிழர்கள் என அலெக்ஸ் கொறியர் முதலிய மொழியியல் ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான வரலாற்றினைக் கொண்ட தமிழ் மக்கள் பயன்படுத்திய இசையே தமிழிசையாகும். பண்டைக்காலத்தில் பாரததேசத்தில் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் இவ்விசை பரந்திருந்தது. பிற்காலத்தில் சிறிது சிறிதாக மாற்றமடைந்து இன்று வெவ்வேறு இசை முறைகளாகப் பிரிந்துள்ள போதிலும் தென்னிந்தியாவில் தொடர்ச்;சியாக இன்று வரை இவ்விசை பயன்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் தற்காலத்தில் கர்நாடக சங்கீதம் எனும் பெயர் மூலமாக இவ்விசை அழைக்கப்படுகின்ற போதிலும் பண்டைத் தமிழிசையும் இன்றைய தென்னிந்திய இசையும் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இவ் தென்னிந்திய இசையின் வளர்ச்சிக்கு அன்று முதல் இன்று வரை ஏராளமான படைப்பாளிகள் தமது படைப்புக்களின் வழியாக இசையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இசைத்தமிழால் சிவபெருமானைப் பாடிப் பணிந்த கரைக்கால் அம்மையராவர். இவரின் படைப்புக்களைப் பின்பற்றி பிற்காலத்தில் தோன்றிய பல அடியார்கள் ஏராளமான படைப்புக்களைச் செய்துள்ளனர். அவரின் படைப்புக்களும், அவரைப்பின்பற்றி உருவாக்கப்பட்ட படைப்புக்களும் பிற்காலத் தென்னிந்திய இசை வரலாற்றில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.