Abstract:
“குரல் இல்லாதவற்கு விரல்” என்ற முதுமொழி குறிப்பிடுவது போல் இயற்கையாகக் குரல் வளம் அமையாதவர்கள் முறையான பயிற்ச்சி செய்வதன் மூலமாகக் குரல் வளத்தினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறும் முடியாதவர்கள் இசைக் கருவிகள் பயில்வதன் மூலமாக இசையில் சிறந்து விளங்க முடியும். இசைக்கருவிகள் ஏராளமாகக் காணப்படுகின்றது. அவற்றில் இயற்கையில் கிடைக்கும் ஒரு இசைக் கருவியாகிய சங்கும் ஒன்றாகும். இது தமிழரின் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் இரண்டறக் கலந்த ஒன்றாகும். இக்கருவியானது காத்தல் கடவுளாகிய திருமாலின் கையில் உள்ள சங்கு, சக்கரம் என்ற முத்திரைகளில் சங்கு முதன்மையானதாக் காணப்படுவதால் இது புனிதமானதாகப் போற்றப்படுகின்றது. சிவனடியார்கள் பஞ்சவாத்தியம் என்றும், கைலாய வாத்தியம் என்றும் சங்னை அழைக்கின்றனர். பொதுவாகக் கோயில் வழிபாடுகளின் போது திருப்பள்ளி எழுச்சி பாடுகின்ற மக்களின் பாரம்பரிய முறையில் சங்கு முக்கியத்துவப்படுகின்றது. சங்கு கடலில் இருந்து கிடைக்கும் பிராணியின் கூட்டிலிருந்து பெறப்படுகின்றது. இது எலும்புக் கூடுபோல அதன் தலைப்பாகத்தில் சுருளைக் குலைத்து விடாமல் ஒரு சிறு துளையிட்டு ஊதுவதற்கு பயன்படுத்துவார்கள். சங்கு அறுக்கப்பட்டு விதம்விதமான வளையங்கள் செய்வார்கள். தமிழர்களின் பண்பாட்டில் மட்டுமல்லாது வேறு மக்கள் மத்தியிலும் சங்கு சிறப்பானதாகக் கருதப்படுகின்றது. வங்காளத்தில் சங்கு ஒரு மங்களச் சின்னமாகும். ஒரு பெண் மங்களப்பெண் என்பதை அவள் கையில் உள்ள சங்கு வளையல்கள் கொண்டு தெரிந்து கொள்ளாம். சங்கு இடம்புரி, வலம்புரி என இரண்டு வகைப்படும். இவை இரண்டிலும் வலம்புரி சிறப்பானதாகக் கருதப்படுகின்றது. சங்கின் நாதம் ஓம்கார ஒலியைக் குறிக்கும். சங்குத் தீர்த்தத்தின் சிறப்புப் பற்றி பத்மபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறான சிறப்புக்கள் பலவற்றினைக் கொண்ட சங்கானது தமிழர்களின் காற்று வாத்தியக் கருவிகளுள் ஒன்றாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏனைய இசைக் கருவிகளுக்கு இல்லாது சிறப்பு சங்கிற்கு உண்டெனலாம். ஏனெனில் சங்கானது பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் மானிட வாழ்வில் பயன்படுத்தப்படுகின்றமை நோக்கதற்குரியது.