Abstract:
இசை ஓர் உலகப் பொது மொழி என்பதனை யாராலும் மறுக்க முடியாது. மனிதன் நாடு, மொழி, இனம், பண்பாடு பேன்ற நிலைகளில் வேறுபாடு இருந்தாலும் உள்ளம் சார்ந்து ஒருமை நிலைக்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல் இசைக்கலைக்குண்டு. இது போன்ற பல சிறப்புக்கள் கொண்ட இசையின் கருவிகளில் தோன்றும் ஒலிகளில் மொழிகள் தெரிவதில்லை ஆயினும் குரல் வழி உருவாகும் வாய்ப்பாட்டிசையிலேயே மொழி அறியப்படுகின்றது. அவ்வாறான மொழி மூலமாகத்தான் ஓர் இன மக்களின் சிறப்பினை அறிந்து கொள்ளலாம். அத்துடன் தாய் மொழியில் இசைக்கின்ற இசையியனை கேட்கின்றபோது மனதில் ஏற்படும் இன்பம் ஓர் சுகமான அனுபவம் எனலாம். அந்தவகையில் உலகில் பயன்பாட்டில் உள்ள இசை முறைகளில் முதன்மையானதும், பண்டையதுமாகத் திகழ்வது தமிழிசையாகும். தமிழிசையின் தோற்றம் முதல் வடமொழித்தாக்கம் ஏற்படும் வரை தனித்தமிழில் ஒலித்த தமிழிசை பிற்காலத்தில் பெயர் மாற்றம் பெற்று அர்த்தம் தெரியாமல், மொழி புரியாமல் இசை அரங்குகளில் வேற்று மொழிப்பாடல்கள் ஒலிக்கின்றன. அந்தவகையில் தாய் மொழியின் பழமை, தமிழிசையின் தொன்மை, அதன் சிறப்பு போன்றவற்றினை தெளிவுபடுத்துவதற்கும், தாய் மொழியில் இசை பயில்வதாலும் பாடுவதாலும் உள்ளத்தில் ஏற்படும் ஆனந்தத்தினை இளைய சமுதாயத்திற்கு உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டும் மேற்கொள்ளப்படும் இவ்வாய்வானது வரலாற்று மற்றும் இலக்கிய அடிப்படையில் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.