dc.description.abstract |
இசையை அறிந்தால் அதன் மூலம் இறைவனை அடையலாம் என்பது ஆன்றோர் வாக்கு. இறைவனை வழிபடுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அவற்றுள் இசை சிறந்த வழியாகக்கருதி இறையடியார்கள் இசைபாடி இறைவனை வழிப்படுகின்றனர். இறைவனை மட்டுமல்லாது ஐந்தறிவுள்ள விலங்குகள் முதல் ஆறறிவு கொண்ட மனிதன் வரை எல்லாவற்றையும் தன்வசப்படுத்தும் தன்மை இசைக்கு உண்டு என்பதை மெய்ஞானம் சுட்டும் சான்றுகள் மூலம் அறிகின்றோம். கலைகளுக்கெல்லாம் முதன்மையாகக் கருதப்படும் இசைக்கலை மரம், செடி, கொடிகள் வளர்வத்ற்குரிய கருவியாகவும், உடல், மனம் சார்ந்த நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் அமைவதாகத் தற்கால விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. தொன்றுதொட்டு வளர்ந்துவரும் தமிழிசை வரலாற்றில் சங்ககாலம் மிகவும் சிறப்பிடம் பெறுகின்றது. ஏனெனில் இக்காலத்திலேயே ஏராளமான நூல்கள் தோன்றி இசை வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிந்தது. எனவே சங்ககாலத்து நூல்களான தொல்காப்பியத்துடன் எட்டுத்தொகை, பத்துப்பாட்டில் கூறப்பட்டுள்ள இசை தொடர்பான செய்திகளில் பண்கள் பற்றிய தகவல்களின் அடிப்படையிலேயே தமிழிசை மரபானது இன்றுவரை வளர்க்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு பேணப்பட்டுவந்த பண்முறையானது எவ்வாறு மாற்றம் பெற்று வந்தது, அதன் தற்கால போக்கு எவ்வாறு உள்ளன போன்றவற்றினை வரலாற்று மற்றும் ஒப்பீட்டு முறையில் ஆராய்வதாக இந்த ஆய்வு அமைகின்றது. |
en_US |