Abstract:
ஆக்கத்திறன் கொண்ட மனித முயற்சியினால் உருவாக்கப்படுவதே கலைகளாகும். கூடுதல், குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்பு பாராட்டத்தகும் நிலையை அடைகிறது. அப்பொருள் கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் பாராட்டுகின்றோம். எனவே கலை என்பது அளவும், பொருத்தமும் தன்னுள் அடங்கி நிற்பது. அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது, உள்ளத்தைத் தன்பால் ஈர்ப்பது. எந்தவொரு கலையும் சமூக வாழ்வியலை நோக்கியதாகவே எழுகின்றது. அந்தவகையில் உலகிலுள்ள ஒவ்வேரின மக்களுக்கும் தனித்துவமான கலை வடிவங்களும், கலைப் படைப்புக்களும் காணப்படுகின்றன. அவ்வாறே ஈழத்தமிழர்களின் வாழ்வியலிலும் தனித்துவமான கலைவடிவங்கள் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஈழத்தின் கிழக்குப் பகுதியில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்வியலில் கிராமியக் கலைகள் மிகவும் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றன. எனவே அக்கலை வடிவங்கள் எவை எனக் கண்டறிந்து அவற்றினை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இவ்வாய்வானது அமைகின்றது. அத்துடன் இவ்வாய்வானது வரலாற்று மற்றும் விவரண ஆய்வு அணுகு முறைகளை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கீழ்வரும் கிராமியக் கலைகள் கிழக்கிலங்கை மக்களின் வாழ்வியலில் சிறந்து விளங்குவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.