Abstract:
ஆய்வின் நோக்கம்: நற்செய்தி நூல்களில் பிரதிபலிக்கின்ற விருந்தோம்பல் பண்புகளானது இயேசுவினுடைய பகிரங்கப் பணியினுடைய பயண வாழ்வில் எவ்வாறு இருந்தது என்பதனை வெளிக்கொணர்வது பிரதான நோக்கமாகும். ஆய்வு முறைகள்: இவ் ஆய்விற்கு விவரண, உய்த்தறிவு மற்றும் தொகுத்தறிவு முறைகள் கையாளப்பட்டுள்ளன. நான்கு நற்செய்தி நூல்களில் எடுத்தாளப்பட்டுள்ள விருந்தோம்பலின் சிறப்புப் பண்புகளை இனங்காண்பதற்கு தொகுத்தறிவு முறை கையாளப்பட்டுள்ளது. எனவே விருந்தோம்பலின் பொழுது அன்பு, பகிர்வு, இரக்கம், ஏற்றத்தாழ்வுகள், தாழ்ச்சி, முகமலர்ச்சி, பணிவு, போன்ற பல பண்புகள் நற்செய்தி நூல்களில் தொகுத்தறிவு முறை ஊடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இயேசு பகிரங்கப் பணிக்காலத்தில் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார். இதனை உய்த்தறிவு முறை ஊடாக உணர முடிகின்றது. மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நற்செய்தியில் எடுத்துக் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள், சம்பவங்களை தெளிவுபடுத்த விவரண ஆய்வு முறை உபயோகிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்ட விடயங்கள்: நற்செய்தி நூல்களின் அடிப்படையில் இயேசுவிடம் மிளிர்ந்த விருந்தோம்பல் பண்புகளினுடைய சிறப்புக்கள் இனங்காணப்பட்டுள்ளன. சமகால விருந்தோம்பல் பண்புகளினுடைய நிலைப்பாட்டினை மதிப்பீடு செய்தல். தங்கள் கனிவான உபசரிப்பாலும், அன்பான நடத்தையாலும் விருந்தினர்களைக் கவனித்துக் கொள்வதே விருந்தோம்பலின் குறிக்கோளாகும். மேன்மைமிக்க கிறிஸ்தவ குணமாகவிருந்தோம்பல் பண்பைக் கடைப்பிடித்து கடவுளுக்கு விருப்பமான வாழ்க்கை வாழ்தல். சமகாலத்தில் விருந்தோம்பல் என்ற செயல் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து அவர்களுக்குத் தேவையான உணவு, உடை மற்றும் உறைவிடம் அளிக்கும் அன்பின் வெளிப்பாடாகத் திகழ்கின்றது. ஆனால் நற்செய்தி நூல்களின்
அடிப்படையில் இயேசு பாகுபாடு இன்றி அனைவருக்கும் விருந்தோம்பினார்.ஆய்வின் பரப்பு, வரையறைகள்: புதிய ஏற்பாட்டில் 27 நூல்கள் காணப்பட்ட பொழுதிலும் இவ்
ஆய்விற்கு நான்கு நற்செய்தி நூல்களான மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் நூல்களில் உள்ள விடயங்கள் ஆய்வினை ஆழப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு இயேசு எவ்வாறு விருந்தோம்பலில் ஈடுபட்டார் என்ற விடயங்கள் வரையறைப்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் உட்கோள்கள்: ஆய்வின் உட்கோள்கள் இரண்டு முன்வைக்கப்பட்டுள்ளன. விருந்தோம்பலின் சிறப்புப் பண்புகளை நிலைநாட்டுவதற்கான கோட்பாடுகளை நற்செய்தி நூல்கள் முதன்மையானதாகத் தன்னகத்தே கொண்டுள்ளன. இயேசு தனது பகிரங்கப் பணி வாழ்வில் விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார்.