Abstract:
தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் விதந்து போற்றும் உலகப் பொதுமறை என்று பறைசாற்றும் ஒட்டுமொத்த மனிதச் சிந்தனையின் சிறந்த பிழிவு என்று வர்ணிக்கப்படும் ஓர் அறநூல் திருக்குறளே ஆகும். இதனைத் தொகுத்த வள்ளுவப் பெருந்தகையின் புகழை தமிழ்நாடு மட்டுமன்றி இந்த உலகமும் அறிந்து மெச்சக் கூடிய வல்லமை வள்ளுவப் பெருந்தகைக்கே உரியதொன்றாகும். தமிழிலக்கியப் பரப்பி்ல் மிகக் கூடுதலான பிறமொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரேயொரு நூல் என்ற சிறப்பும் திருக்குறளுக்கே உண்டு. இதனை தமிழில் பாண்டித்தியம் பெற்ற ஆங்கிலேயர் ஜி.யூ.போப் தனது குறள் மொழிபெயர்ப்பைச் செய்த முகவுரையிலே குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வின் நோக்கமாக, திருக்குறள் மொழிபெயர்ப்பின் நுட்பங்களும் அவற்றில் ஏற்படும் சிக்கல் தன்மைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதாகும். அவ்வகையில் இவ் ஆய்வின் எல்லையாக அறத்துப்பால், பொருட்பால், மற்றும் இன்பத்துப்பால் ஆகிய மூன்று பிரிவுகளின் இயல்களிலிருந்தும் மிக முக்கியமான எட்டு குறள்களும் அவற்றின் மொழிபெயர்ப்புக்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ் ஆய்வின் கருதுகோளாக திருக்குறள் மொழிபெயர்பை மேற்கொள்வதென்பது மொழிபெயர்ப்பு நுட்பங்ளைப் பயன்படுத்தினாலும் செவ்வனவே அமைவது என்பது கேள்விக்குறியாகும் என்பதாகும். இவ் ஆய்வுக்கான முதல்நிலைத் தரவுகளாக தெரிவுசெய்யப்பட்ட சில அதிகாரங்களும் அவற்றின் மொழிபெயர்ப்புக்களும் அமைகின்றன. மேலும் இரண்டாம் நிலைத்தரவுகளாக ஆய்வுப் பொருண்மையோடு தொடர்புடைய நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வு நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் போன்றன அமைகின்றன.