Abstract:
கிறிஸ்தவ தவக்கால பக்தி இலக்கியமாகிய வியாகுல பிரசங்கம் இலங்கையில் மறைபணியாற்றிய யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரால் எழுதப்பட்டது. இவர் இயேசுவின் பாடுகளின் பின்னணியை இலங்கையில் வாழ்ந்த சாதாரண மக்களின் அறிவுக்கு எட்டிய விதத்தில், எளிய நடையில் அனைவரும் இலகுவில் விளங்கிப் பயனடையும் வகையில் எழுதியுள்ளார். பன்மொழி ஆற்றல் மிக்க இவர், இலங்கையில் பணியாற்றிய காலத்தில் தமிழ் மொழியில் மட்டுமல்லாது சிங்களத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் வியாகுல பிரசங்கம் இலங்கையிலுள்ள தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் இன்றுவரையும் வரவேற்கத்தக்க கிறிஸ்தவ பக்தி இலக்கியமாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆய்வு இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ள நாட்டார் இலக்கியச் சிறப்புக்களை எடுத்துரைப்பதாக அமைகின்றது. யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளார் தமிழிலும் சிங்களத்திலும் பல நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களுள் வியாகுல பிரசங்கத்தை மட்டுமே இவ் ஆய்வு மையப்படுத்தியுள்ளது. வியாகுல பிரசங்கம் பன்முக நோக்கில் அணுகக்கூடியது எனினும், இந்த ஆய்வில் ஆசிரியர் அந்நூலில் எவ்வாறான நாட்டார் இலக்கிய வடிவங்களைக் கையாண்டுள்ளார் என்பது மட்டுமே எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நூலிலுள்ள விடயங்கள் தொகுத்தறிவு மூலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு, அவை பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. யாக்கோமே கொன்சால்வேஸ் அடிகளாரால் எழுதப்பட்ட வியாகுல பிரசங்க நூல் ஆய்வின் முதலாம் நிலைத் தரவாகவும் ஆய்வுடன் தொடர்புடைய நூல்கள், கட்டுரைகள், சஞ்சிகைகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள் இரண்டாம் நிலைத் தரவுகளாகவும் அமைகின்றன. இவ் ஆய்வு தமிழ் கிறிஸ்தவ பக்தி இலக்கியமான வியாகுல பிரசங்கத்தில் செல்வாக்குச் செலுத்தும் நாட்டார் இலக்கிய பண்புகளை வெளிக்கொணர உதவுகின்றது.