Abstract:
கரித்தாஸ் அமைப்பானது உலகிலுள்ள 165 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தேசிய கத்தோலிக்க நலன்புரி அமைப்புகளின் உலகளாவிய கூட்டமைப்பு ஆகும். இவ்வமைப்பு மனித நேயத்தை மையப்படுத்தி சக மனிதர்களை நேரடியாக ஒருவரோடு ஒருவர் தொடர்புபடும் வகையில் செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. இலங்கையில் குறிப்பாகப் போர்க்காலத்தில் இவ் அமைப்பு பல சமூக மேம்பாட்டுச் செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. போர் இடம்பெற்று பல்வேறு இழப்புக்களைச் சந்தித்தவர்களுள் பெண்கள் முக்கியமானவர்கள். இந்நிலையில் கத்தோலிக்கத் திருச்சபை கரித்தாஸ்-கியுடெக் அமைப்பினூடாக பெண்களுக்கான வலுவூட்டல் செயற்திட்டங்கள் பலவற்றை முன்னெடுப்பதனூடாக மனிதநேயப் பண்பாட்டை வளர்த்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். கரித்தாஸ்-கியுடெக் அமைப்பானது கிளிநொச்சி மாவட்டத்தில் பெண்களை வலுவூட்டுகின்ற பல செயற்திட்டங்களை பல்வேறு உதவித்திட்டங்களினூடாக மேற்கொண்டு வருவதுடன், பெண்களை மையப்படுத்திய பல சமூகமட்ட குழுக்களை உருவாக்கி அதனூடாக நீடித்து நிலைக்கக் கூடிய பல பணிகளை முன்னெடுக்கின்றது. இவ் ஆய்வின் நோக்கங்களாகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் கரித்தாஸ்-கியுடெக் அமைப்பின் பெண்களை வலுவூட்டும் செயற்திட்டங்களில் பல உள-சமூக விடயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு, அதற்கான ஆற்றுப்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், இவ் அமைப்பினால் வழங்கப்பட்ட வலுவூட்டல்கள் பெண்களை சமூகத்தில் இயல்பான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்கின்றனவா? என்பதையும் அதனூடாக மனிதநேய பண்பாட்டை உருவாக்க இவ் அமைப்பின் செயற்திட்டங்கள் எவ்வாறு உதவியுள்ளன என்பதையும் திறனாய்வுக்குட்படுத்தி அவை மேம்பட உதவக்கூடிய வழிகளை முன்வைப்பதாக அமைந்துள்ளன. ஆய்வின் பயன்பாடுகளாகப் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் கிளிநொச்சியில் கரித்தாஸ் - கியுடெக் அமைப்பு பெண்களை வலுவூட்டுவதற்கு எவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளன என்பதை அறிந்து, அதற்கென அவர்கள் மேற்கொண்ட அணுகுமுறைகள் பற்றிய தெளிவைப் பெறக்கூடியதாய் அமைகின்றது. மேலும் இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபை பெண்களின் மாண்பை மதித்து பெண்களின் மேம்பாட்டில் எவ்வாறு அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளது என்பதையும் அதனூடாக எவ்வாறான மனிதநேய பண்பாட்டை அச்சமூகத்தில் தோற்றுவித்துள்ளது என்பதையும் அறியமுடிகின்றது. குடும்பத்தில் மிக முக்கிய இடம் வகிக்கும் பெண்களே பிள்ளைகளையும் வழிநடத்தும் முக்கிய பொறுப்பில் காணப்படுகின்றார்கள். எனவே கரித்தாஸ்-கியுடெக் அமைப்பு குடும்பம், சமூகம் என்னும் அடிப்படையில் மனிதநேய பண்பாட்டை வளர்க்கப் பெண்களுக்குச் சிறந்த வலுவூட்டலை வழங்கி, அவ் வழிகாட்டல்கள் ஊடாக மனித சமூக மேம்பாட்டுக்கு பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளது என்பது இவ் ஆய்வில் தெளிவாகின்றது. மேலும் இவ் ஆய்வு கரித்தாஸ்-கியுடெக் அமைப்பு போரினால் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த பெண்களை வலுவூட்டி அவர்களை இயல்பான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு இட்டுச் செல்ல எவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளது என்னும் விடயத்தைத் திறனாய்வுக்குட்படுத்தி, அவ் செயற்திட்டங்கள் மேம்பட உதவக்கூடிய வழிகளை முன்வைக்கின்றது. ஆய்வுக்கென கரித்தாஸ்-கியுடெக் அமைப்பு போருக்குப் பின் கிளிநொச்சியில் பெண்கள் வலுவூட்டலுக்காக மேற்கொண்டு வந்த செயற்திட்டங்களின் கோட்பாடுகளை உய்த்துணர் முறை மூலம் பகுப்பாய்வுக்குட்படுத்தி, செயற்திட்டங்களில் உள்வாங்கப்பட்ட பெண்கள் குழுக்களுடன் நேரடி சந்திப்பை ஏற்படுத்தி, கரித்தாஸ்-கியுடெக் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பெண்களுக்கான வலுவூட்டல் செயற்திட்டங்களை அவதானித்து, நேர்காணல், வினாகொத்து போன்ற தரவு சேகரிக்கும் முறைகளினூடாக ஆய்விற்கான தரவுகள் பெறப்பட்டுள்ளன.