dc.description.abstract |
ஆசிரியத்துவமானது மாணவ சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு வழிகாட்டும் நோக்கில் அதற்கேயுரிய தகுதிகளைக் கொண்ட உயர் அந்தஸ்து மிக்க சேவையாகும். இயேசு தனது போதனைகளை முன்வைக்கப் பயன்படுத்திய முறைமைகள் அவரின் ஆசிரியத்துவத்தின் சிறப்பை எடுத்துரைக்கின்றது. இயேசுவின் போதனைகளில் உவமைகள் சிறப்பிடம் பெறுகின்றன. உவமைகள் அறிந்த ஒன்றிலிருந்து அறியாத ஒன்றை அறிய வைப்பதாக அமைகின்றன. அந்த வகையில் மனதைக் கவர்ந்து, கவனத்தை ஈர்க்கின்ற உவமை வலிமைமிக்க போதனா கருவியாகத் திகழ்கின்றன. இயேசு தான் வாழ்ந்த காலத்தில் சாதாரண மக்களின் பாவனையிலிருந்த, அவர்களின் வாழ்வுடன் மிக நெருங்கிய தொடர்புடைய விடயங்களை உமைகளாகக் கையாண்டமையே அவரின் போதனைகளின் தனித்தன்மையைச் சிறப்புற எடுத்துரைக்கின்றன. இயேசுவின் உவமைகள் வெறும் கதைகளாக அல்லாது மக்களுக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதை நோக்காகக் கொண்டிருந்தன. உவமைகளை இயேசு எளிய நடையில், பொருத்தமான முறையில் போதித்தார். உவமைகள் இயேசுவின் போதனைகளை அதிகம் சுவையூட்டி, மக்கள் விரும்பி செவிமடுப்பதற்கான ஆவலைத் தூண்டின. அவர் தனது உவமைகளூடாகப் பாமர மக்களுக்கு தமது படிப்பினைகளை முன்வைக்கும் முறையில் அவரது ஆசிரியத்துவத்தின் சிறப்பு வெளிப்படுகின்றது. அந்தவகையில் இவ் ஆய்வானது பின்வரும் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயேசுவின் போதனைகளின் அவர் உவமைகளை என்ன நோக்கத்திற்காகக் கையாண்டார் என்னும் விடயத்தையும், உவமைகளூடாக வெளிப்படும் இயேசுவின் ஆசிரியத்துவத்தின் சிறப்பையும் எடுத்துரைக்கும் வகையில் ஆய்வு அமைவதுடன், அவருடைய போதனைகளில் கையாளப்பட்ட உவமைகளை வகைப்படுத்தி, அவற்றை நற்செய்தியாளர்கள் தாங்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ற வகையில், எந்த மையக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கிறார்கள் என்னும் விடயமும் ஒப்பீட்டு நிலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இயேசுவின் போதனைகளில் அவர் பயன்படுத்திய ஆசிரியத்துவம் முறைமைகள் சமகாலத்தில் எவ்வாறு பயனுடையதாய் அமையும் என்னும் விடயமும் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு முடிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ் ஆய்விற்கான தரவுகள் மூல நூலான திருவிவிலியத்தில் இருந்தும், துணை நூல்களிலிருந்தும் பெறப்பட்டு, கருத்துக்கள் விபரண, ஒப்பீட்டாய்வு பகுப்பாய்வு என்னும் முறையியல்களை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. |
en_US |